பரிதாபங்கள் கோபி-சுதாகர் மீது பண மோசடி புகார்- நடந்தது என்ன?

பரிதாபங்கள் கோபி - சுதாகர்

பிரபல யூடியூப் சேனலான பரிதாபங்கள் சேனல் மூலம் பிரபலமான கோபி சுதாகர் இருவர் மீதும் பண மோசடி புகார்கள் எழுந்துள்ளன. 

  • Share this:
    மெட்ராஸ் சென்ட்ரல் சேனல் மூலம், கோபி சுதாகர் காமெடி ஜோடி பிரபலமாகினர். பின்னர் பரிதாபங்கள் என்ற தனி யூடியூப் சேனல் ஆரம்பித்து நகைச்சுவையாக பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்

    பரிதாபங்கள் சேனலுக்கு தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், கஜா புயல் தாக்கியபோது FUNDMELON என்ற செயலி மூலம் 35 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர் கோபி சுதாகர் ஜோடி.

    அதைத் தொடர்ந்து கிரவுட் பண்ட் மூலம், திரைப்படம் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதை நம்பி 25 ஆயிரத்திற்கும் அதிமானோர் அளித்த தொகை மூலம் 6 கோடி ரூபாய்க்கும் மேலான நிதி கிடைத்துள்ளது.

    இந்தியாவிலேயே கிரவுட் பண்ட் மூலம் இவ்வளவு அதிக தொகை கிடைத்தது கோபி சுதாகர் ஜோடிக்குத்தான் என்கின்றனர். இதற்கு நன்றி தெரிவித்து இருவரும் ஒரு வீடியோவும் வெளியிட்டனர்.

    அதையடுத்து, ஹேய் மணி கம் டுடே, கோ டுமாரோ என்ற தலைப்பில் திரைப்படம் தயாரித்து வருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். டைட்டில் லாஞ்ச் என்ற நிகழ்ச்சியில் மட்டும் பிரபலங்களைப் பங்கேற்க வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

    எல்லா அறிவிப்புகளும் முடிந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படத் தயாரிப்பு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஒரு அறிவிப்பு கூட கோபி - சுதாகர் ஜோடி வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில்தான், யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர், கோபி சுதாகர் மோசடி என்ற தலைப்பில் இரண்டரை மணிநேர வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    அதில், மோசடியான செயலி்களைப் பற்றி விளம்பரம் வெளியிட்ட கோபி சுதாகர் ஜோடி, அதன் வழியாக பணம் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    குறிப்பாக, SUPERBACKER என்ற செயலியில், 500 ரூபாய் செலுத்தினால், தினசரி ஒரு சதவீதம் லாபம் நமக்கு கிடைக்கும் என்ற விளம்பரம் பரிதாபங்கள் சேனலில் வெளியாகியிருந்ததை சுட்டிக் காட்டியுள்ளார். அதேபோல், FUNDMELON என்ற மோசடி செயலி மூலம் தான் கிரவுட் பண்டில் ஈடுபட்டனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்

    கோபி சுதாகர் ஜோடி மூலம் மட்டுமே பிரபலமான FUNDMELON செயலியின் பின்னணியில் மோசடிக் கும்பல் இருப்பதாகவும் ஜேசன் சாமுவேல் புகார் எழுப்பியுள்ளார். அதனால் இந்த மோசடியில் இருவரும் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கோபி மற்றும் சுதாகர் இருவரும், இதுகுறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

    அதில், சூப்பர் பேக்கர் செயலி குறித்து தாங்கள் விளம்பரம் மட்டுமே வெளியிட்டதாகவும் தங்களுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

    அதேநேரம், தங்கள் மணி கம் டுமாரோ திரைப்படத்தின் தயாரிப்பு நடந்து கொண்டிருப்பதாகவும், கிரவுட் பண்ட் மூலம் நிதியளித்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அதுகுறித்த அப்டேட் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளனர்

    மேலும் கொரோனாவால் தங்கள் குழு கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகவும் விரைவில் டீசர் வெளியிடப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர். வெளியான குற்றச்சாட்டுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதேநேரம், கிரவுட் பண்டில் நிதியளித்தவர்களுக்கு என்ன வகையான அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஜேசன் சாமுவேல் தனது வீடியோவில் காட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கிரவுட் பண்ட் குறித்து கோபி சுதாகர் வெளிப்படையான அறிக்கை அளிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பரிதாபங்கள் சேனலில் நடிகராக இருந்த பாலு போஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் நடித்த அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் பெரும்பாலும் நிதி மோசடி தொடர்பான வீடியோக்களில் நடித்திருந்ததால் அவை நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

     
    Published by:Karthick S
    First published: