‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் புகழ் பெற்றவர் திருமுருகன். இவர் இயக்கும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் இயக்கிய கடைசி சீரியல் ‘கல்யாண வீடு’. இத்தொடரில் திருமுருகன் நாயகனாக நடிக்க அவருடன் நடிகர் மௌலி, ஸ்பூர்த்தி கவுடா, ஆர்.சுந்தர்ராஜன், ரம்யா, சவிதா உள்ளிட்ட பலர் நடித்தனர். 2018-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் 600-க்கும் மேற்பட்ட எபிசோட்களைக் கடந்து 2020-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இத்தொடருக்குப் பின் தனது இயக்கத்தில் உருவாகும் படைப்பு குறித்த அறிவிப்பை திருடிவி யூடியூப் சேனலில் திருமுருகன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேயர்களுக்காக புதிய நிகழ்ச்சி பண்ண வேண்டும் என்று ஆசை. குட்டிக் கதைகள், அனைத்து மதத்தினருக்குமான ஆன்மீகம், உணவு இதைப்பற்றியெல்லாம் நிறைய நிகழ்ச்சிகள் திருடிவி யூடியூப் சேனலில் வரப்போகிறது.
இதில் முதலாவதாக பத்திரிகைகளில் வரும் ஒரு பக்க கதை போல குட்டிக் கதைகளை நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம். அதற்கான புரமோஷன் வீடியோக்கள் எடுத்து வைத்திருக்கிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும்.
எல்லோரது மனதிலும் அடுத்ததாக நான் என்ன செய்யப்போகிறேன் என்ற கேள்வி இருக்கும். அதற்கான நல்ல பதிலை நான் விரைவில் சொல்கிறேன். ஏனென்றால் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது இன்னும் முழுவடிவம் பெறவில்லை. முழுவடிவம் பெற்றதும் கண்டிப்பாக உங்களிடம் அதை சொல்வேன். இப்போதைக்கு நான் இயக்கியிருக்கும் குட்டிக் கதைகளை பாருங்கள். என்றும் உங்களுடைய ஆதரவுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
பல தொலைக்காட்சி தொடர்களை இயக்கி தயாரித்திருக்கும் திருமுருகன் எம்.மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.