பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த விஜயகாந்தின் போலீஸ் படங்கள்!

விஜயகாந்த்

திரையில் போலீஸ் என்றதுமே முதலில் நினைவுக்கு வருபவர் விஜயகாந்த் தான்.

  • Share this:
தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

80, 90-களில் பல வெற்றிப் படங்களை கொடுத்த விஜயகாந்த் நடித்த முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்று போலீஸ். திரையில் போலீஸ் என்றதுமே முதலில் நினைவுக்கு வருபவர் விஜயகாந்த் தான். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் பதிந்த பல போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் விஜயகாந்த் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்த சில முக்கியப் படங்களைப் பார்க்கலாம்.

மாநகர காவல்

தியாகராஜன் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாநகர காவல். இந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக சுமா நடித்திருப்பார். நம்பியார், லட்சுமி, நாசர், ஆனந்தராஜ், செந்தில் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். ஏ.வி.எம் புரொடக்ஷன் தயாரிப்பில் வெளிவந்த 150-வது படம் இது. 150 நாட்களை தாண்டி தியேட்டர்களில் ஓடிய இந்தப் படம், தெலுங்கில் சிட்டி போலீஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது.

கேப்டன் பிரபாகரன்

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் அதே 1991-ஆம் ஆண்டு வெளிவந்த படம் கேப்டன் பிரபாகரன். இந்தப் படத்தில் விஜயகாந்த், சரத்குமார், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜாவின் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வெற்றி பெற்றன.

சத்தியமங்கலம் காட்டில் சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. விஜயகாந்துக்கு இது 100-வது படம். வீரப்பன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருப்பார். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேதுபதி ஐ.பி.எஸ்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், விஜயகாந்த் மற்றும் மீனா நடிப்பில் வெளி வந்த படம் சேதுபதி ஐ.பி.எஸ். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட குழந்தைகளை போலீஸ் அதிகாரியான விஜயகாந்த் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது.

சத்ரியன்

மணிரத்னத்தின் உதவியாளர் சுபாஷ் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு விஜயகாந்த், பானுப்பிரியா, ரேவதி, திலகன் நடிப்பில் வெளிவந்த படம் சத்திரியன். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட 150 நாட்களை தாண்டி இந்த படம் திரையரங்குகளில் ஓடியது.

இதில் வரும் பன்னீர் செல்வம் என்ற கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று, ‘பழைய பன்னீர் செல்வமா திரும்ப வரணும்’ என்ற வசனம் இன்றும் பல இடங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தையாக மாறியிருக்கிறது.

ஆனஸ்ட்ராஜ்

கேசவ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ஆனஸ்ட்ராஜ். இதில் விஜயகாந்துக்கு ஜோடியாக கௌதமி நடித்திருப்பார், இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். தேவன், மனோரமா, செந்தில், விஜயகுமார், நிழல்கள் ரவி போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஜய காந்தின் நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்தப் படம், தெலுங்கில் போலீஸ் கமெண்டு என்று ரீமேக் செய்யப்பட்டது.

புலன் விசாரணை

செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த படம் புலன் விசாரணை. இந்தப் படத்தில் விஜயகாந்த், ரூபிணி, நம்பியார், ராதாரவி, ஆனந்தராஜ், சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 150 நாட்களை தாண்டி ஓடிய இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புலன் விசாரணை படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

வல்லரசு

மகாராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் வல்லரசு. இதில் விஜயகாந்த் ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். இந்த படத்தில் பி.வாசு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஜயகாந்தின் படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இந்தப் படமும், வேற்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: