• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Malik Review: மாலிக் - அதிகாரத்தின் வன்முறை

Malik Review: மாலிக் - அதிகாரத்தின் வன்முறை

மாலிக்

மாலிக்

படத்தின் முதல் 12 நிமிடக் காட்சிகளை ஒரே டேக்கில் எடுத்துள்ளனர். நடிப்பு, ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள், இசை என அனைத்தும் சிறப்புடன் அமைந்த இந்த ஆரம்பக் காட்சி படத்தில் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.

 • Share this:
  Take Off, C U Soon படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் அடிப்படையில் ஒரு எடிட்டர். அவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மூன்றாவது திரைப்படம் மாலிக். இந்த மூன்றுப் படங்களிலுமே பகத் பாசில் பிரதான வேடங்களில் நடித்துள்ளார். அமேசான் பிரைம் வீடியோவில் மாலிக் வெளியாகியுள்ளது.

  சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அஹமதலி சுலைமான் (அலி இக்கா) கடத்தல் தொழிலில் வாழ்க்கையை ஆரம்பித்து, ரமதாப்பள்ளி மீனவ கிராமத்தின் நாயகனாக எப்படி உயர்கிறார் என்பதை மாலிக் திரைப்படம் கூறுகிறது.

  சுலைமானாக பகத் பாசில் நடித்துள்ளார். அவரது வயதான காலத்தில் படம் ஆரம்பிக்கிறது. அமைச்சரை விரல் நுனியில் நிற்க வைக்கும் அதிகாரமிக்க அவரை, ஹஜ் யாத்திரைக்கு கிளம்புகையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்கிறது போலீஸ். பல வருடங்களுக்கு முந்தைய வழக்கிற்காக அவரை சிறையில் அடைக்கிறார்கள். சிறையில் அவரைத் தீர்த்துக்கட்ட போலீஸ்துறை முனைப்போடு செயல்படுகிறது. கொலை செய்ய ஒரு ஆளையும் நியமிக்கிறார்கள். அலி இக்கா மீது போலீசாருக்கு ஏன் இத்தனை வன்மம்? அவர் செய்த தவறு என்ன? நண்பர்களே அவரை முதுகில் குத்த துடிப்பதேன்? என்பதான கேள்விகளுக்கு பிளாஷ்பேக்கில் பதிலளிக்கிறார்கள்.

  உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். திருவனந்தபுரத்துக்கு அருகில் இருக்கும் பீமாபள்ளியில் 2009 மே 17 ஆம் தேதி போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் உரூஸ் என்ற பண்டிகையை கொண்டாடியபோது இந்த சம்பவம் நடந்தது. முதலில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது பையனை சுட்டுக் கொன்று, அவனது சடலத்தை கடற்கரையோரமாக வீசினார்கள். விசாரணையின் போது பீமாபள்ளி முஸ்லீம்களுக்கும். அதன் பக்கத்து மீனவ கிராமமான, செறியாத்துறை கிறிஸ்தவர்களுக்கும் ஏற்பட்ட மோதலை கலைக்க போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டது. அது முழுக்கப் பொய். போலீஸார் திட்டமிட்டு நடத்திய படுகொலை அது. அப்போதைய முதலமைச்சர் அச்சுதானந்தனனே அதனை ஒப்புக் கொண்டார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாலிக்கை எடுத்திருக்கிறார்கள். பீமாபள்ளி ரமதாப்பள்ளியாகவும், செறியாத்துறை எடவத்துறாவாகவும் படத்தில் வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த உண்மைச் சம்பவத்தை சுலைமான் என்ற கதாபாத்திரத்தை வைத்து சொல்ல முயன்றதில் தவறில்லை. ஆனால், சாதாரண நபர் கடத்தலில் இறங்கி, ஒரு ஊரின் நம்பிக்கை நாயகனாக உயரும் கதையை மணிரத்னத்தின் நாயகன் தொடங்கி பல படங்களில் பாத்திருப்பதால் பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளை எளிதில் யூகிக்க முடிகிறது. சூழலை தவறாக புரிந்து கொள்ளும் நண்பர்கள், சொந்த லாபத்துக்காக இரு தரப்புகளை மோதவிடும் அரசியல்வாதி என கதாபாத்திரங்களும் நாம் பல படங்களில் பார்த்தவை. பலரது பார்வையில் பிளாஷ்பேக் சொல்லப்படுவதால் அழுத்தமாக பதிய வேண்டிய துப்பாக்கிச்சூடு காட்சியும் - அது சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தும் - சாதாரண ஆக்ஷன் காட்சியைப் போல் கடந்துவிடுகிறது.

  படத்தின் பிளஸ் என்றால் பகத் பாசில் உள்ளிட்டவர்களின் நடிப்பு. இளமையில் சுலைமானாகவும், முதுமையில் மக்களால் அலி இக்கா என்று மரியாதையாக அழைக்கப்படுகிறவராகவும், 30 வருட காலகட்டத்தை தாங்கிய கதாபாத்திரம் அவருக்கு. விடலையாக சின்னச் சின்ன குற்றங்கள் செய்து, கடத்தல் தொழிலில் இறங்குவதுவரை ஒரு சாதாரண அடித்தட்டு இளைஞனை நினைவுப்படுத்துகிறார். சற்றே வளைந்த தடுமாறிய நடையும், பலவீனமான உடல்வாகுமாக வயதான அலி இக்கா கவர்கிறார். அவரது காதலியாக வந்து மனைவியாகும் நிமிஷா சஜயன், மகனை இறந்து கதறுகிற இடத்தில் நம்மையும் கலங்கடிக்கிறார். போலீஸ் அதிகாரியிடம் அவர் காட்டும் விறைப்பும், அழுத்தமும் அவரது கதாபாத்திரத்தை உயர்த்திக் காட்டுகிறது. பல இடங்களில் பகத்தை விஞ்சி நிற்கிறது இவரது நடிப்பு.

  நண்பர்களாக வரும் வினய் போர்ட், தினேஷ் பிரபாகர், அரசியல்வாதியாக வரும் தில்லீஷ் போத்தன் என அனைவருக்கும், பகத் பாசிலைப் போலவே, இளமை முதல் முதுமைவரை பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் வேடங்கள். போலீசாக இந்திரன்ஸ். பகத்தை கொலை செய்ய ஆளை தயார் செய்யும் காட்சிகளில் அத்தனை இயல்பு. நேர்மையான கலெக்டராக ஜோஜு ஜார்ஜ். மகனின் மரணத்தை காணத்துடிக்கும் ஜலஜாவின் கதாபாத்திரம் புதுசு. இரு தரப்பினரையும் மோதவிடும் தில்லீஷ் போத்தனின் சுயரூபம் கடைசிவரை யாருக்கும் தெரியாமலிருப்பது நெருடுகிறது.

  படத்தின் முதல் 12 நிமிடக் காட்சிகளை ஒரே டேக்கில் எடுத்துள்ளனர். நடிப்பு, ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள், இசை என அனைத்தும் சிறப்புடன் அமைந்த இந்த ஆரம்பக் காட்சி படத்தில் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. அதனை பூர்த்தி செய்வது போல அடுத்தடுத்தக் காட்சிகள் நகர்ந்தாலும், பிளாஷ்பேக்கும், கிளைமாக்ஸும் எளிதாக யூகிக்க முடிவதால் முழுமையான அனுபவத்தை தராமல் மாலிக் தடுமாறுகிறது.

  மத மோதலின் போர்வையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடும், சிறையில் இருக்கும் கைதியை கொலை செய்ய துணிவதும், அதற்கு அவர்களே ஒரு ஆளை தயார் செய்வதும் அதிகாரத்தின் வன்முறை எத்தனை இயல்பாக சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது என்பதை அதிர்ச்சியுடன் காட்டுகிறது. அதிக எதிர்பார்ப்பில்லாமல் பார்த்தால் மாலிக் ஏமாற்றாது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: