கலர்ஸ் தமிழில் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன என்றாலும் இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அம்மன், மாங்கல்ய சந்தோஷம், இதயத்தை திருடாதே, அபி டெய்லர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதனிடையே திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது "சில்லுனு ஒரு காதல்" மெகா சீரியல். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த சீரியலில் ஹீரோவாக நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிகர் சமீர் அகமது, ஹீரோயினாக சுட்டி பெண் வேடத்தில் நடிகை தர்ஷினி கவுடா நடித்து வருகின்றனர்.
சூரிய குமார் என்ற கேரக்டரில் நடிகர் சமீர் அகமது, கயல்விழி கேரக்டரில் தர்ஷினி கவுடா நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளனர். இவர்களை தவிர ஸ்ரீலதா, ரேகா ஏஞ்சலினா, வித்யா சந்திரன், ஷியமந்தா கிரண், நாதன் ஷியாம் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். சில்லுனு ஒரு காதல் சீரியல் 2 இந்த ஆண்டு ஜனவரி 4 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ராஜேஷ், ராகவி, சிங்கமுத்து, சஞ்சனா சிங், அபிராமி வெங்கடாசலம், சோனா, மிமிக்ரி கலைஞர் சேது சுப்ரமணி உள்ளிட்ட பலர் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
சில்லுனு ஒரு காதல் கதையின்படி, தற்போது கயல்விழி என்ற கயல் (தர்ஷினி கவுடா) போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறுகிறார். அவரது கணவர் சூர்ய குமார் ஐபிஎஸ் (சமீர் அஹமது), அகாடமியில் மூத்த பயிற்சி அதிகாரியாக உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சூரியகுமாரின் முயற்சியால் போலீஸ் அகாடமியில் உள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் முதல் முறையாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கயலும் அவளுடைய தோழிகளும் பணத்தை எடுக்க அருகில் உள்ள வங்கிக்கு செல்கிறார்கள். வங்கியில் நெட்வொர்க் பிரச்சனை காரணமாக வாடிக்கையாளர்களை சிறிது நேரம் காத்திருக்க சொல்கிறார்கள்.
கயல் மற்றும் நண்பர்கள் வங்கியின் உள்ளே இருக்கும் போது, முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்து வங்கியை கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். கயல் உதவிக்காக சூர்யகுமாரை அணுகினாலும், கொள்ளையர்களிடமிருந்து பணயக்கைதிகளை பாதுகாப்பது சவாலாகவே உள்ளது. இந்த சவாலை சூர்ய குமார் எப்படி சமாளிக்க உள்ளார் என்பது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அடுத்து சூர்ய குமார் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Also Read : விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்.. சீரியல் நடிகையின் ஆசை!
மராத்தி டிவி தொடரான ராஜா ராணிச்சி கா ஜோடியின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்த சீரியல், சூர்யா என்ற ஐபிஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த 17 வயது கயல் பயணத்தில் தொடங்கியது. 17 வயது சின்னப்பெண்ணனான கயல் மாமியார் சொல் கேட்டு நடக்க கஷ்டப்பட்டு வந்தார், தற்போது பயிற்சி அகடாமியில் கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.