சன் டி.வி, விஜய் டி.வி., ஜீ தமிழ் தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாக ‘அம்மன் 3’, ‘எங்க வீட்டு மீனாட்சி’, ‘வள்ளி திருமணம்’, ‘இதயத்தை திருடாதே 2’, ‘அபி டெய்லர்’, ‘இது சொல்ல மறந்த கதை’, 'சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அதேபோல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களையும் ஒளிபரப்பி வருகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி 'போட்டிக்குப் போட்டி: R U Ready??' என்ற புத்தம் புதிய கேம் ஷோவை கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தினங்களில், இரவு 8.00 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 -ன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவனா பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
கலர்ஸ் தமிழின் பிரபல நட்சத்திரங்கள், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக பல்வேறு சவால்கள் கொண்ட இப்போட்டியில் களமிறங்குகின்றனர். இந்நிகழ்ச்சி, ஒரு லீக் வடிவ போட்டியாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இரண்டு குழுக்களாக பிரிந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் மோதி வருகின்றனர். தொடக்க விழாவின் போது குழு A – ல் சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், வள்ளி திருமணம் மற்றும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் மற்றும் குழு B -ல் இது சொல்ல மறந்த கதை, அம்மன் 3, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் மற்றும் மீரா ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் இடம் பெற்றனர்.
நடனம், பாட்டு, புதிர்போட்டியுடன் நகைச்சுவை நயாண்டிக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியின் நடுவராக கலா மாஸ்டர் பங்கேற்றுள்ளார். திரையுலகில் பிரபல நடன இயக்குநராக வலம் வரும் கலா மாஸ்டர், ஜோடி நம்பர் ஒன் சீசன் 1, சூப்பர் டான்சர் 1 (மலையாளம்), சூப்பர் டான்ஸ் 2 (மலையாளம்), ஓடி விளையாடு பாப்பா, மானாட மயிலாட, D 4 டான்ஸ் போன்ற பிரபலமான நடன ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்துள்ளார்.
Also Read : தெலுங்கு சீரியலில் ஜோடி சேரும் தமிழ் சீரியல் பிரபலங்கள்...
இந்நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் சூப்பர் ஆடியன்ஸாக பங்கேற்க உள்ளார். ரசிகர்கள் கொடுக்கும் மதிப்பெண்ணுடன் கலா மாஸ்டர் கொடுக்கும் மதிப்பெண்ணும் இணைந்து அணியின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும். பல நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து தனது ‘கிழி கிழி... கிழிச்சிட்டீங்க’ என்ற கமெண்ட்டால் ரசிகர்களிடையே பிரபலமான கலா மாஸ்டர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவிற்கு நடுவராக பங்கேற்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.