• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • ’இது என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ்’ - பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மீண்டு வந்த கதை!

’இது என்னோட ரெண்டாவது இன்னிங்ஸ்’ - பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மீண்டு வந்த கதை!

பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்

உங்களுக்காக நான் 10 ரூபாய் கூட செலவு செய்ததில்லை. ஆனால் நான் உங்களுடன் தமிழில் பேசியிருக்கிறேன். அந்த தமிழ் உங்களையும் என்னையும் இணைத்திருக்கிறது.

 • Share this:
  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தான் உடல்நலம் தேறி வருவதாக யூ-ட்யூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தனது இயல்பான பேச்சுகளால் மக்களைக் கவர்ந்தவர். கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்துள்ள இவர் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், பேச்சின் மீதுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து பட்டிமன்ற மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற மேடைகளில் பாரதியை கட்டாயம் பார்க்க முடியும்.

  அதிலும் பட்டிமன்ற ராஜாவுக்கும், பாரதிக்கும் தான் கடுமையான போட்டி நிலவும். பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா யார் பக்கம் தீர்ப்பளிப்பார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அந்தளவுக்கு பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர்.

  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பாரதி அனுமதிக்கப்பட்டார். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சி மருத்துவர்களுக்கு கை கொடுக்கவே, விரைவில் பாரதி பாஸ்கர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை பிறந்தது.

  இதையடுத்து தற்போது கல்யாணமாலை மற்றும் பட்டிமன்றம் ராஜா ஆகியோரது யூ-ட்யூப் சேனல்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாரதி. அதில், ”மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் 22 நாள்கள் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளேன். தற்போது உடல்நலம் தேறி வருகிறது. பழைய தெம்புடனும், உற்சாகத்துடனும் மேடையில் உங்களைச் சந்திக்கின்ற நாளை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

  உங்களுக்காக நான் எதுவுமே செய்தது இல்லை. அப்படி இருக்கையில் பலரும் எனக்காக பிரார்த்தனை செய்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருடனும் ஃபோனில் பேசவும், நேரில் சந்திக்கவும் இன்னும் கொஞ்சம் காலமாகும். எல்லா மதங்களையும் கடந்து எல்லாரும் எனக்காக பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். என்னால் நம்பவே முடியவில்லை. உங்களுக்காக நான் 10 ரூபாய் கூட செலவு செய்ததில்லை. ஆனால் நான் உங்களுடன் தமிழில் பேசியிருக்கிறேன். அந்த தமிழ் உங்களையும் என்னையும் இணைத்திருக்கிறது.

  முதலமைச்சர் தொடங்கி அத்தனை விசாரிப்புகள். ஏதேனும் உதவி வேண்டுமா என அவ்வளவு அழைப்புகள். ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் போது, தலையில் ஏதோ தட்டியது போலிருந்தது. சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கொள்ளவில்லை, தூங்கி எழுந்தால் சரியாகிடும் என்று வீட்டுக்கு வந்தேன். ஆனால் எனது கணவர் தான் பிடிவாதமாக என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  பாப்பையா சார், ராஜா சார், கல்யாணமாலை மோகன், மீரா நாகராஜன், சுகி சிவம் சார் என என் மீது அக்கறை காட்டியவர்களின் பட்டியல் நீளும். இவர்கள் எல்லாரும் என்னுடன் பழகியவர்கள். ஆனால் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. இரண்டாவது முறை கிடைத்த இந்த வாழ்க்கை இன்னும் அழகாக மாறியிருக்கிறது. முழுமையாக உடல்நலம் தேறி என் வார்த்தைகளின் பழைய சக்தியோடு நான் மீண்டும் மேடைக்கு வருவேன் என நம்புகிறேன். கோயில்களில் இருந்து நீங்கள் அனுப்பி வைத்த பிரசாதம் எங்கள் வீட்டில் மலை போல் குவிந்துள்ளது. இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ். நான் மீண்டு வருவதற்கு ஏதோ ஒரு காரணம் இருப்பதாக நான் புரிந்துக் கொள்கிறேன். அந்த தேடலை நோக்கி தான் இனி எனது பயணம் இருக்கும். சிறு வார்த்தையில் நன்றி என இதை சொல்லி விட முடியாது. நன்றி, மீண்டும் சந்திப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: