• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சின்னத்திரையிலும் பெருகும் ஆதரவு.. சூர்யாவுக்காக சன் டிவி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ!

சின்னத்திரையிலும் பெருகும் ஆதரவு.. சூர்யாவுக்காக சன் டிவி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ!

சன் டிவி நடிகர்

சன் டிவி நடிகர்

"நான் சூர்யா சார் பக்கம் நிற்கிறேன். ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை கஷ்டப்படுத்தி மற்றும் இழிவுபடுத்தி இருப்பதாக ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது"

  • Share this:
    பிரபல சீரியல் நடிகரான அருண்குமார் ராஜன் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

    தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் ஜெய்பீம் திரைப்படம் தான். நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள இந்த திரைப்படம் 1990-களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்டது என்பதால் படம் பார்த்த ரசிகர்கள் மனதில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதே நேரத்தில் உண்மை சம்பவத்திற்கு மாறான சில விஷயங்களை ஒரு சில குறியீடுகள் மூலம் காட்சிப்படுத்தி தங்கள் சமுதாயத்திற்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாக கூறி வன்னியர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

    எனவே சூர்யாவிற்கு எதிராக பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். தொடர்ந்து சூர்யாவிற்கு எதிராக பல வன்முறை கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டு வருவதால் அரசியல் ரீதியான தாக்கத்தையும் திரைத்துறை சந்தித்து வருகிறது. பெரும்பாலான திரைத்துறையினர் நடிகர் சூர்யா பக்கம் நிற்பதை அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலம் வெளிப்படுத்தி வரும் நிலையில், பிரபல சீரியல் நடிகரான அருண்குமார் ராஜன் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.

    "நானும் வன்னியர் தான்.. உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் சூர்யா சார்" என்ற கேப்ஷனிட்ட இந்த வீடியோவில் அருண்குமார் ராஜன் பேசியிருப்பதாவது, " நான் சூர்யா சார் பக்கம் நிற்கிறேன். ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை கஷ்டப்படுத்தி மற்றும் இழிவுபடுத்தி இருப்பதாக ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. நானும் வன்னியர் தான். எனது பார்வையிலிருந்து பார்க்கும் போது சத்தியமாக இந்த படம் என்னை புண்படுத்தவில்லை. இருளர் சமூகம் போன்ற மிகவும் சிறுபான்மையினராக இருக்க கூடியவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரியாக பதிவு செய்திருந்தார் சூர்யா சார்.

    அதற்காகவே அவருக்கு ஒரு பெரிய ஹேட்ஸ்ஆஃப். ஏனென்றால் என்னை போன்றே நிறைய பேருக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியாமலே போயிருக்கும். படத்தை பார்த்த அனைவருக்குமே கண்கள் கலங்கி, மனது வலித்திருக்கும். உரிய அடையாளத்துடன் நாம் வாழும் இதே மாநிலத்தில் அடையாளம் இன்றி, வீடின்றி நாடோடிகளாக இன்னும் இருக்கும் அவர்களின் நிலையை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

    படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை சமமாக நடத்த வேண்டும் என்று சூர்யா சார் எடுத்து காட்டி இருக்கும் நல்ல விஷயங்களை பார்க்காமல், படத்தில் காட்டப்பட்டிருக்கும் வில்லன் கேரக்டர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் போன்ற விஷயங்களை கையில் எடுத்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்.?அதே போல சூர்யா சாரை எட்டி உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு என்று அறிவிப்பதெல்லாம் எந்தவிதத்தில் நியாயம்.

    இந்த கால மற்றும் வருங்கால தலைமுறையினர் அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும் என்ற நல்ல கருத்தை தான் படம் எடுத்துரைக்கிறது. இந்த படத்தை தயாரித்து நடித்துள்ள சூர்யா சாரை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. ஜெய்பீம் படம் இருளர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை பிறருக்கு செய்ய வேண்டும் என்று நினைக்கும் அந்த மனசு தான் சார் கடவுள். எனவே அத்தகைய மனது கொண்டவரை நீங்கள் மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் புண்படுத்தாதீர்கள்.

    நான் வன்னியர் என்றாலும் எனக்கு எல்லா ஜாதியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லாருமே ஒன்று தான் என்று நினைத்து பழக கூடிய நபர் நான். ப்ளீஸ் சூர்யா சார் எடுத்த இந்த பெரிய முயற்சியை பாராட்டவில்லை என்றாலும் அவரை காயப்படுத்தாதீர்கள்.




    சூர்யா சார் நான் ஒரு வன்னியர் தான். திரும்பவும் சொல்கிறேன் அனைவரும் சமம் என்று என் மனதில் ஜெய்பீம் மூலம் ஆழமாக விதைத்துள்ளீர்கள்.. நான் இதை இன்னும் பலருக்கு எடுத்து செல்வேன். சர்ச்சைகளால் இது போன்ற முயற்சிகளை கைவிட்டு விடாதீர்கள். இன்னும் பல படங்களை இது போல எடுத்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துங்கள்" என்று சுமார் 4.58 நிமிடங்கள் ஓட கூடிய வீடியோவில் அருண்குமார் ராஜன் பேசி  இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: