நடிகை சினேகா 2000 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'இங்கனே ஒரு நிலாபக்ஷி' என்கிற படத்தில் நடனக்கலையின் மீது ஆர்வம் கொண்ட பெண்ணாக நடித்து அசத்திய கையோடு, அதே ஆண்டில் இயக்குனர் சுசி கணேசனின் 'விரும்புகிறேன்' திரைப்படத்தின் வழியாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். ஆனால் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்த 'என்னவளே' திரைப்படம் தான் சினேகாவின் முதல் தமிழ் திரைப்படமாக வெளியானது. குறிப்பிட்ட படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக பலரின் பாராட்டுகளை பெற்றார் சினேகா.
அதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'ஆனந்தம்' திரைப்படம் சினேகாவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு கே. பாலச்சந்தர் உட்பட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நாயகியாக, விஜய், அஜித், கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் சினேகா!
2009 ஆம் ஆண்டு வெளியான 'அச்சமுண்டு' திரைப்படம் வழியாக, சினேகா நடிகர் பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்தார். அப்போதிலிருந்ததே பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் அதை வதந்தி என்று மறுத்தாலும், 2011 ஆம் ஆண்டில், "ஆம்... நானும் சினேகாவும் எங்கள் பெற்றோரின் ஆசியுடன் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்று பகிரங்கமாக அறிவித்தார் பிரசன்னா. இந்த காதல் ஜோடியின் திருமணம் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது கணவர் பிரசன்னவுடன் சென்னையில் வசித்து வரும் சிநேகாவிற்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வெள்ளித்திரையில் ஒரு கலக்கு கலக்கிய பிறகு நடிகை சினேகா சின்னத்திரைக்குள்ளும் காலடி எடுத்து வைத்தார். 2013 - 2014 வரை புதுயுகம் சேனலில் ஒளிபரப்பான மேளம் கொட்டு தாலி கட்டு சீசன் 1 மற்றும் சீசன் 2-வை தொகுத்து வழங்கினார். பிறகு டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 1, 2 மற்றும் 3, டான்ஸ் கில்லாடிஸ், ஜீ டான்ஸ் லீக் உட்பட பல வகையான நிகழ்ச்சிகளில் இடம்பெற்று ஜீ தமிழ் டிவியின் ஆஸ்தான நடுவர்களில் ஒருவரானார் சினேகா. தற்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.
குறிப்பிட்ட நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை (அதாவது ஞாயிறு, ஏப்ரல் 10 ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு) ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு ப்ரோமோ வீடியோவில், நடிகை சினேகா யாரோ ஒருவரை பார்த்து திடீரென்று கதறி அழ தொடங்குகிறார், பிறகு தனது இருக்கையில் இருந்து எழுந்து அழுந்துகொண்டே நடந்து செல்கிறார்; ஆனால் அவர் ஏன் அழுகிறார்? யாரை பார்த்து அழுகிறார்? என்கிற விவரங்கள் எதுவும் இல்லை. தற்போது அந்த ப்ரோமோ வீடியோ ஜீ தமிழ் ரசிகர்கள் மற்றும் சினேகாவின் ரசிகர்களால் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.