தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஆயிரக்கணக்கான சீரியல்கள் வந்து போனாலும், சில தொடர்களை பார்வையாளர்களால் மறக்கவே முடியாது. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, நிஜ வாழ்க்கையில் மிகச்சில மாற்றங்களையாவது அவைகள் செய்திருக்கும். அந்த வரிசையில் தற்போது எதிர்நீச்சல் சீரியல் பார்வையாளர்களை, வெகுவாக ஈர்த்திருப்பதோடு சிந்திக்கவும் வைத்திருக்கிறது.
சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலை இயக்குநர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கோலங்கள் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர். இதில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மாரிமுத்து, சபரி பிரசாந்த், கமலேஷ், விபு ராமன், சத்யபிரியா, பாம்பே ஞானம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிப்பு என்பதை விட கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது. காரணம், நம் வீட்டில் அல்லது அக்கம் பக்கத்து வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது எதிர்நீச்சல். அதில் நந்தினியாக ரசிக்க வைக்கும் நடிகை ஹரிப்ரியாவிடம், நடிக்க வந்தது குறித்தும், எதிர்நீச்சல் சீரியல் பற்றியும் பல விஷயங்களை பேசினோம்.
“நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை தான். பின்னர் விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சேன், டைரக்ஷன்ல இண்ட்ரெஸ்ட் இருந்தது. எடிட்டிங்கிற்கு இண்டர்ன்ஷிப்பும் போயிட்டு இருந்தேன். நிறைய கற்றுக் கொண்டிருந்தேன். அப்போது விஜய் டிவி-யில் ‘கனா காணும் காலங்கள்’ சீரியல் ஆடிஷனுக்கு எனக்கே தெரியாம எங்க அம்மா அப்ளை பண்ணிருந்தாங்க. கேமரா முன்னாடி நடிக்கிறதுக்கு எனக்கு விருப்பமில்லைன்னாலும் அந்த ஆடிஷனில் கலந்துக் கொண்டேன். ஒரு நாள் ’நீங்க செலக்ட் ஆகியிருக்கீங்கன்னு’ ஃபோன் வந்தது. அந்த நொடியில் இருந்து தான் என் பயணம் தொடங்கியது.
ஆனா சினிமா மேல எப்போவும் ஒரு கிரேஸ் இருந்தது. எனக்கு பெருசா ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடையாது. சின்ன வயசுல இருந்தே சினிமா தான். ஒருநாளைக்கு நாலு படம் கூட பாப்பேன். கனா காணும் காலங்களுக்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்தாலும், ‘லட்சுமி வந்தாச்சு’, ‘பிரியமானவள்’ சீரியல்கள்ல தான் முதன்மை கதாபாத்திரமா நடிக்க ஆரம்பிச்சேன். இப்போ எதிர்நீச்சல்ல நந்தினியா நடிச்சிட்டு இருக்கேன்.
நந்தினியின் நகைச்சுவைக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் கூடுகிறதே?
இதுவரைக்கும் நான் காமெடி முயற்சி பண்ணதும் இல்ல, அந்த ஐடியாவும் இல்ல. நந்தினியை ரசிக்கிறாங்கன்னா அந்த மொத்த க்ரெடிட்ஸும் எங்க இயக்குநருக்கு தான் சேரும். அவங்க என்ன சொல்றாங்களோ அதை சிட்டி ரோபோ மாதிரி செய்றோம், இயக்குநரும் எழுத்தாளரும் தான் எங்க வசீகரன். படிச்ச இன்னசெண்ட் பொண்ணு தான் நந்தினி. உண்மையிலேயே படிப்புக்கும் நம்ம குணத்துக்கும் சம்பந்தமே இல்லை. படிச்சவங்க எல்லாரும் முதிர்ச்சியா நடந்துப்பாங்கன்னு ஒரு கண்ணோட்டம் இருக்கு. ஆனா அது அப்படியில்லை. எதிர்நீச்சல் நந்தினி கூட அப்படித்தான், எல்லாத்தையும் பட்டு பட்டுன்னு வெளிப்படையா பேசுற படிச்ச பொண்ணு. எதார்த்தமா ஜாலியா இருக்கும்ன்னு கதை கேக்கும் போதே தெரிஞ்சது, ஆனா இது அவ்வளவு நகைச்சுவையா இருக்கும்ங்கறது நடிக்க நடிக்கத்தான் தெரியுது. அது ஒர்க் அவுட் ஆனதில் மிக்க மகிழ்ச்சி.
டப்பிங் சவாலாக இருக்கிறதா?
எங்க அப்பா தஞ்சாவூர். அந்த பக்கம் நிறைய சொந்தக்காரங்களும், நண்பர்களும் இருக்காங்க. ஸோ, அவங்கக்கிட்ட பேசி பேசி, அந்த ஸ்லாங்கை ஈஸியா வர வச்சிக்கிட்டேன்.
உங்கள் நிஜ வாழ்க்கையில் குணசேகரன் போன்ற மனிதரை கடந்து வந்திருக்கிறீர்களா?
கடந்து வரலைன்னா தான் ஆச்சர்யம். சில பேர் இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பாங்களான்னு ஆச்சர்யமா கேட்டாங்க. அதற்கு, ’குணசேகரன் மாதிரி ஒருத்தர் உங்க வாழ்க்கையில் இல்லைன்னா நிச்சயம் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அதை நினைத்து சந்தோசப்பட்டுக்கோங்க’ என்றேன் நான். வெளியில் நம்மைச் சுற்றி, ஆயிரம் குணசேகரன்கள், ஆயிரம் கதிர்வேல்கள் இருக்காங்க. இவங்க எல்லாரையும் சமாளிச்சுட்டு தான் நாம ஒவ்வொரு நாளையும் கடந்து வர்றோம்.
இயக்குநர் திருச்செல்வத்துடன் பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கிறது?
எதிர்நீச்சலில் நான் இருப்பதும், அவருடன் பணிபுரிவதும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். யாருக்கோ எங்கேயோ புண்ணியம் பண்ணிருக்கேன். அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஆர்டிஸ்டுங்கறத தாண்டி, டைரக்ஷன்லயும் அவர் கிட்ட நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். அவர் ஒரு அழகான கதைச்சொல்லி.
எதிர்நீச்சலைப் பற்றி ஹரிப்ரியா என்ன சொல்றாங்க?
ஆடியன்ஸ் மாதிரி எதிர்நீச்சலுக்கும், அதுல நடிக்கிறவங்களுக்கும் நான் பெரிய ஃபேன். எல்லாரும் நிஜமாவே அழுவோம், சிரிப்போம். நடிகர்கள்ங்கறத தாண்டி எல்லாரும் ஒரு குடும்பத்துல எப்படி இருப்போமோ அப்படி எதார்த்தமா இருப்போம். சீனியர் நடிகர்கள் நடிக்கிறதை பக்கத்துல இருந்து பாக்குறதுக்கே நான் ஆசிர்வதிக்கப்பட்டவளா உணர்றேன்.
எதிர்கால திட்டம்?
இதுவரைக்கும் எனக்கு நடந்தது எல்லாமே தானா நடந்தது தான். நாம என்ன சாப்பிடணும், என்ன ட்ரெஸ் போடணும்ன்னு சின்ன சின்ன விஷயங்களை மட்டும் தான் திட்டமிடணும். பெரிய விஷயங்கள் தானா நடக்கும். அதனால நான் எப்போவும் ஃப்ளோவுல போற ஆள் தான்.
பரதநாட்டிய கலைஞராகவும் ஜொலிக்கிறீர்களே?
கிளாசிக்கல் டான்ஸ் 5 வயசுல இருந்தே கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் அரங்கேற்றம் பண்ணினேன். டான்ஸ்லயே எம்.ஏ படிச்சேன். நடனப்பள்ளியும் நடத்தினேன். நடுவுல ஒரு சின்ன விபத்துல கால் கொஞ்சம் பிரச்னையாகிடுச்சு. அதனால இப்போதைக்கு டான்ஸுக்கு சின்ன பிரேக் விட்ருக்கேன். அதே சமயத்துல சீரியலும் பிஸியா போய்ட்டு இருக்கதால டைமும் இல்ல.
குணசேகரனிடம் நீங்கள் சிக்கி தவிப்பது போல் வெளியில் இருப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...
யாரும் பயந்து ஓடாதீங்க. நின்னு போராடுங்க. பாரதியார் சொன்ன மாதிரி ரெளத்திரம் பழகணும். யாருக்காகவும் உங்க உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க. தப்புன்னு தெரிஞ்சா அதை தட்டிக் கேக்கலாம், அதுக்காக போராடலாம். அது அந்த நிமிஷத்துல கஷ்டமா இருந்தாலும் பின்னாடி யோசிச்சு பாக்குறப்போ, நமக்கே நம்மள நினைச்சா பெருமையா இருக்கும்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.