சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கணவர் மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது நீதிமன்றம். எனினும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு சித்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை போலீசார், அவரது கணவர் ஹேம்நாத், அவரது பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஹேம்நாத் 60 நாட்கள் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார். சித்ராவின் மரணத்தில் அரசியல் புள்ளிகள், பணம் படைத்தவர்கள் என பலருக்கு தொடர்பு இருப்பதாக ஹேம்நாத் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
திடீர் திருப்பமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நகர்வுகள் சித்ராவின் மரண வழக்கை புரட்டிப்போட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற விசாரணையில், தற்கொலை செய்ய சித்ராவை ஹேம்நாத் தூண்டினார் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஹேம்நாத் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இதையும் படிக்க: விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தினருக்கு ஜெயம் ரவி ஆறுதல்… குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார்…
எனவே, சித்ராவின் மரணத்திற்கும் ஹேம்நாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது தப்பில் வாதாடாப்பட்டது. சித்ரா-ஹேமநாத் காதலித்து திருமணம் செய்துகொள்வதற்கு சித்ராவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்பு காட்டியதே அவர் அதிர்ச்சியான முடிவை எடுக்க காரணம் என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதாடப்பட்டது.
வரதட்சணை கேட்டு தொல்லை, அதாவது இந்திய தண்டனை சட்டம் 498-A என்ற பிரிவின் கீழ், கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். மிக முக்கியமாக, சித்ராவின் மரணம் குறித்து நடத்தப்பட்ட ஆர்.டி.ஓ விசாரணையில், வரதட்சணை கேட்டு ஹேம்நாத் மிரட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஹேம்நாத் தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
இந்த விவாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதேபோல், விசாரணைக்கு ஹேம்நாத் நேரில் ஆஜராவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேலும் படிக்க: லாரன்ஸ், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி – 2… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
மெக சீரியலில் நடக்கும் திருப்பம் போல, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடைக்கு நடிகை சித்ராவின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். விவாதம் செய்யுங்கள் என்று நீதிமன்றம் கூறிய போது, மனுதாக்கல் செய்ய சித்ராவின் தந்தை தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, சித்ராவின் தந்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.