கொரோனா தொற்று அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து நேரடியாக தொலைக்காட்சிகளிலும் ஒரு சில படங்கள் வெளியிடப்பட்டன.
கன்னட படமான ‘மாயாபஜார் 2016’ படம் தமிழில் ‘நாங்க ரொம்ப பிஸி’ என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு 2020-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி தீபாவளி அன்று காலை 11 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஸ்ருதி மராத்தே உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
அதைத்தொடர்ந்து பொங்கலுக்கு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் முத்தையா இயக்கியிருந்த ‘புலிக்குத்தி’ பாண்டி திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு சன் டிவியில் வெளியானது. பின்னர் ஹலீதா சமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மதுமதி, மணிகண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் ‘ஏலே’ திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் விஜய் டிவியில் வெளியானது.
#BREAKING | இப்போது வெள்ளித்திரைக்கு முன்பாகவே உங்கள் இல்லத் திரையில்! 📺🥳
தற்போது அந்தப் பட்டியலில் ‘சர்பத்’ திரைப்படமும் இணைந்துள்ளது. பிரபாகரன் இயக்கத்தில் கதிர், சூரி, ரகசியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை லலித் குமார் வாயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இத்திரைப்படம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 11-ம் தேதி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அத்தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.