ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரி: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரி: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

விஷால் - நடிகர்

விஷால் - நடிகர்

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் விஷால் மீதும் அவரது  நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த டிசம்பர் 20-ம் தேதி எதிரணியில் உள்ள தயாரிப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தியாகாரஜ நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இறுதியில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர். மேலும் அவர்கள், ‘தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக் காலம் முடிந்த பிறகும் அதில் விஷால் தொடர்கிறார். வைப்புநிதியாக உள்ள 7 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளார். அவர் தலைவராகப் பொறுப்பேற்றபோது கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் முறைகேடு நடந்துள்ளது” என்று கூறினர்.

  எதிர்தரப்பினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள், கணக்கு வழக்குகளில் குளறுபடிகள் என சர்ச்சையாகி வருவதால், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசே ஏற்றது.

  அதன்படி, என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு நியமித்தது. இனிமேல் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்துமே இவர் மீதான மேற்பார்வையில்தான் நடைபெறும். தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சங்கத் தலைவர் விஷால். அதில், எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம் என்றும் இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கத்திற்குள் பிரச்னைகள் நீடிப்பதால் தனி அதிகாரி நியமித்ததாகவும், பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிட்டால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் சங்க நிர்வாகம் ஒப்படைக்கப்படும் எனவும் அரசுதரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

  தொடர்ந்து தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் அளித்த ஒரே புகாரின் அடிப்படையில் தனி அதிகாரியை நியமித்தது தவறு என்றும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் விஷால் தரப்பினர் வாதம் வைத்தனர்.

  இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மே 7-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

  வீடியோ பார்க்க: அவெஞ்சர்ஸின் கதை தெரியுமா?

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: Actor vishal, Tamil cinema Producer council