மஸ்தான் இயக்கத்தில் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெட்டி பசங்க’ . இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், “‘வெட்டி பசங்க’ படம் வெற்றிப் படம் என்று சொல்வதற்கு உண்டான அனைத்து விஷயங்களும் படத்தின் ட்ரெய்லரில் இருக்கிறது.
படத்தில் ஹீரோவாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார்கள். அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். புதுமுக நடிகருக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம். தயாரிப்பாளர்கள் தான் ஒரு திரைப்படம் உருவாக முக்கிய காரணம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளப்படுவதே இல்லை.
ஒருபடம் வெற்றியடைய வேண்டுமெனில் 3 பேரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதில் முதலாவது இயக்குநர். திட்டமிட்டு சரியான பட்ஜெட்டில் முடிப்பதில் மறைந்த இயக்குநர் ராம நாராயணன் தான் சிறந்தவர். அவரது படங்கள் நஷ்டமடைந்ததில்லை. ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படத்தை வெற்றிபெறச் செய்தவர். எனவே சிறு படத்தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை முதன்மையான குருவாக ஏற்றுக் கொண்டு பணியாற்றினால் நஷ்டம் ஏற்படாது.
சிறிய பட்ஜெட் படமென்றால் 30 நாட்கள், சுமாரான படமெனில் 40 நாட்கள், அதிகம் ஹீரோக்கள் இருந்தால் 50-ல் இருந்து 60 நாட்களுக்குள் முடித்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடையமாட்டார்கள். சில இயக்குநர்கள் அப்படி செய்வதில்லை. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
ஹீரோக்களுக்கு ஒரு அளவான சம்பளம் கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சம்பளம் தமிழ்நாட்டில் கொடுக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பெரிய ஹீரோக்களுக்கு உதாரணமாக ரூ.10 கோடியில் படமெடுக்கிறார்கள் என்றால் அதில் 25% வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 40 முதல் 45 சதவிகிதம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.
ஹீரோக்கள், நடிகைகள் சிலர் பாடி கார்டுடன் தான் படப்பிடிப்புக்கு வருகிறார்கள். நயன்தாரா பாதுகாவலருடன் தான் வருகிறார். நடிகைகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இருக்கிறதா? எதற்காக அந்த பாதுகாவலர்கள். ஒரு இயக்குநருக்கே 5 பாடிகார்ட் இருந்தார்கள்.
ஹீரோயின்கள் தமிழகத்தில் படம் நடிக்கிறீர்கள். ஆனால் மும்பையில் இருந்து ஹேர் ட்ரஸ்ஸர், மேக்கப் மேன் எதற்கு? எங்கள் தமிழ்நாட்டில் படம் எடுக்க உங்களுக்கு எதற்கு இந்தி மேக்கப் மேன். நடிகை ஆன்ட்ரியாவுக்கு உதவியாளர்கள் மட்டும் 5 பேராம். அதில் 3 பேர் மும்பையில் இருந்து வர வேண்டுமாம். நான் கேள்விப்பட்டதை சொல்கிறேன். ஒப்பனை கலைஞர்கள் தமிழகத்தில் இல்லையா?
நயன்தாராவுக்கும் மும்பையில் இருந்துதான் மேக்கப் மேன் வருகிறார்கள். ஹீரோயின்களின் உதவியாளர்களுக்கு மட்டும் ஒருநாளுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படுகிறது. 50 நாட்கள் ஷூட்டிங் எனில் அவர்களுக்கு மட்டும் ரூ.50 லட்சம் ஒதுக்கினால் தயாரிப்பாளர் நிலை என்னவாகும். செலவினங்கள் அதிகமாகிறது என்பதற்காக இதை எடுத்துச் சொன்னேன். யாரையும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல” இவ்வாறு தயாரிப்பாளரும் நடிகருமான ராஜன் பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andrea Jeremiah, Kollywood, Nayanthara