முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் சமீபத்திய படங்கள்: ஒரு ரவுண்ட் அப்!

பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் சமீபத்திய படங்கள்: ஒரு ரவுண்ட் அப்!

96, செக்கச் சிவந்த வானம் பட போஸ்டர்

96, செக்கச் சிவந்த வானம் பட போஸ்டர்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கடந்த வாரம் தமிழில் வெளியான 96, ராட்சசன், நோட்டா ஆகிய 3 படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளன. மேலும் பாக்ஸ் ஆபீஸில் இப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பது குறித்த ஒரு தொகுப்பு இதோ.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வேலை நிறுத்தத்தை சந்தித்த தமிழ் சினிமா துறை தற்போது அதிலிருந்து மீண்டு, வாரம் ஒரு பெரிய படம் ரிலீஸ் என புத்துயிர் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் 3 முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி மூன்றுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.

இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் முதல் நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.1.70 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்பும் பாசிடிவ் விமர்சனமும் மற்ற படங்களை விடவும் இப்படத்துக்கு கூடுதல் காட்சிகளை பெற்று தந்து படத்தை வெற்றிபெறச் செய்துள்ளது.

தெலுங்கு படங்களின் மூலம் தமிழக இளைஞர்களின் மனங்களை வென்ற விஜய் தேவரகொண்டா, தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம் நோட்டா. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான இப்படம் தெலுங்கில் நல்ல வசூலையும் தமிழில் சுமாரான ஓபனிங்கையும் பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த அரசியல் குளறுபடிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் சென்னையில் முதல் மூன்று நாட்களில் 57 லட்சம் வரை வசூல் செய்துள்ளது.

இந்தப் படங்களுக்கு நடுவே எந்தவித ஆரவாரமுமின்றி வெளியான ராட்சசன் படமும் விமர்சகர்களின் பாராட்டுக்களால் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை, வித்தியாசமான கதையமைப்பின் மூலம் சென்னையில் இப்படம் 33 லட்சம் வசூல் செய்துள்ளது. போட்டிகளுக்கு நடுவே வெளியாகாமல் இருந்திருந்தால், இப்படம் இன்னும் கூடுதலாக வசூல் செய்திருக்கும் என்பதும் பலரது கருத்தாக உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் தொடர்ந்து பாக்ஸ் அபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முதல் 11 நாட்களில் சென்னையில் மட்டுமே இப்படம் 7 கோடி வரை வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டில் காலாவிற்கு பிறகு சென்னையில் 7 கோடி வசூல் செய்த தமிழ் படம் எனும் சிறப்பையும் செக்கச் சிவந்த வானம் பெற்றுள்ளது.

மேலும் தமிழில் இந்த வாரம் எந்த பெரிய நடிகரின் படமும் வெளிவராததால் கடந்த வாரம் வெளியான மூன்று படங்களும் தொடர்ந்து இந்த வாரமும் வசூல் வேட்டை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Box office, Kollywood, Ratsasan