முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்த சூர்யாவின் NGK... வருத்தத்தில் படக்குழு...!

பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்த சூர்யாவின் NGK... வருத்தத்தில் படக்குழு...!

என்ஜிகே

என்ஜிகே

இந்த கோடை விடுமுறையில் வெளியான நட்சத்திர நடிகர்களின் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளன.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சூர்யாவின் என்.ஜி.கே. திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றதோடு பாக்ஸ் ஆபீஸிலும் படு தோல்வியை சந்தித்துள்ளது.

கோடை விடுமுறையில் சுற்றுலாத் தலங்கள் களைக்கட்டுவது போல ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் திரையரங்குகளும் திருவிழா கோலம் காண்பது வழக்கம்.

படையப்பா, கில்லி, சந்திரமுகி, அயன் என கோடை விடுமுறையில் வெள்ளிவிழா கொண்டாடிய படங்களுக்கென தனி வரலாறே உண்டு. ஆனால் இந்த ஆண்டு கோடை விடுமுறை தமிழ் சினிமாவிற்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.

ஒருவகையில் இதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது நயன்தாராவின் ஐரா. கோடை விடுமுறையை துவக்கி வைக்கும் விதமாக மார்ச் இறுதி வாரத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியை தழுவியது.

இதைதொடர்ந்து வெளியான விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், ஜீவாவின் கீ, விஷாலின் அயோக்யா, சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களும் அடுத்தடுத்து வரிசைக்கட்டி வந்து தோல்வியை தழுவின.

குறிப்பாக குடும்ப ரசிகர்களை அதிகம் கொண்ட சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மிஸ்டர் லோக்கல் படம் பள்ளி விடுமுறையை பயன்படுத்தி பெரியளவில் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்மறையான விமர்சனத்தால் அவர் கேரியரிலேயே மோசமான தோல்வி படமாக மாறியது மிஸ்டர் லோக்கல். இதன் உச்சமாக கடந்த வாரம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான என்.ஜி.கே படமும் இந்த தோல்வி பட்டியலில் இணைந்துள்ளது.

முதல்முறையாக சூர்யா செல்வராகவன் கூட்டணி இணைந்திருப்பதாலும் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கியிருக்கும் படம் என்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் குழப்பமான கதை, மோசமான திரைக்கதை என என்.ஜி.கே படம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக செல்வராகவனின் படங்கள் ஒன்று வெற்றிபெறும் இல்லையெனில் விமர்சகர்களிடம் பாராட்டுக்களை குவிக்கும். ஆனால் இதில் எதுவும் இல்லாமல் என்.ஜி.கே திரைப்படம் செல்வராகவனுக்கும் சூர்யாவுக்கும் கசப்பான அனுபவமாக மாறியுள்ளது.

இதுபோக இப்படத்திற்கு எதிராகவும் இப்படத்தை கலாய்த்து தள்ளியும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

தொடர் தோல்விகளால் கோடை விடுமுறையில் தத்தளித்த தமிழ் சினிமாவிற்குக் ஒரே ஆறுதலாக ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 திரைப்படம் மட்டும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் மழையை பொழிந்தது.

அதேபோல் குழந்தைகளை கவரும் விதமாக உருவாகியிருந்த மான்ஸ்டர் படமும் இந்த கோடை விடுமுறையை சரியாக பயன்படுத்திய மற்றொரு படமாக அமைந்தது.

ஒட்டுமொத்தத்தில் இந்த கோடை விடுமுறை தமிழ் திரையுலகிற்கும் சரி ரசிகர்களுக்கும் சரி மோசமான ஒரு விடுமுறையாக அமைந்து ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Also see...

First published:

Tags: Box office, NGK, Tamil Cinema