கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் மாடலிங் துறையிலிருந்து திரைத்துறையில் 2013-ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களான ஃபகத் பாசில், துல்கர் சல்மான் ஆகியோரது படங்களில் நடித்திருக்கும் இவர் பொன்னம்பிளி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
தமிழில் சன் டிவியில் ‘நந்தினி’ சீரியலில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார் ராகுல். இத்தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராகுல், அதைத்தொடர்ந்து பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘சாக்லேட்’ தொடரிலும் நாயகனாக நடித்தார். கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் இத்தொடர் சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாக சன் டிவி அறிவித்தது. தற்போது சன் தொலைக்காட்சியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் யுவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்தில் மாடலிங் துறையைச் சேர்ந்த லக்ஷ்மி நாயரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்த ராகுலுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. அதற்கான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.