ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நெட்ஃபிலிக்ஸ் கதை தெரியுமா?

நெட்ஃபிலிக்ஸ் கதை தெரியுமா?

நெட்ப்ளிக்ஸ்  கதை

நெட்ப்ளிக்ஸ் கதை

Story of the great OTT king Netflix: 2021 இல் 190 நாடுகளில் தன் ராஜ்யத்தை அமைத்து உலகின் பெரிய சிம்மாசனத்தைப் போட்டு அமர்ந்துகொண்டது. 210 மில்லியன் வாடிக்கையாளர்களை நெட்ஃபிலிக்ஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

கோவில் இல்லாத ஊரில் குடியேற வேண்டாம் என்பார்கள். இப்போது உள்ள ஊர்களில் கோவில் இருக்கிறதோ இல்லையோ வீட்டுக்கு ஒரு நெட்ஃபிலிக்ஸ் அக்கவுண்ட் இருக்கிறது.

ஆடம்பரப்  பொருளாய் கருதப்பட்ட நெட்ஃபிலிக்ஸ்  இன்று சாதாரணமாக எல்லார் கைகளிலும் விளையாட்டு பொருள் போல் சர்வ சாதாரணமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.  கொரோனா, லாக்டவுன் எல்லாம் வந்த பிறகு அது இன்னும் சகஜமாகி விட்டது. மக்கள் தங்கள் நேரங்களை எப்படி கழிக்க என்று நினைக்கும் பொழுது ஓடிடி தளங்கள் தக்க சமயத்தில் வந்து கைக் கொடுப்பது போல் தங்கள் சந்தைகளை விரிவாக்கிக்கொண்டது. 2021 கணக்கீட்டில் ஏறத்தாழ 80% இந்தியர்கள் ஓடிடி தளங்களை வைத்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. அந்த அளவு மக்களோடு இணைந்து விட்டது.

அதில் அதிகப்படியான மக்கள் பார்ப்பது டிஸ்னி + ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம்,நெட் பிலிக்ஸ் தான். அதில் நெட்பிலிக்ஸின் கதை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

ஆரம்ப கட்டம்..

நெட்ஃபிலிக்ஸ் 1997 இல் ரீட் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மார்க் ராண்டால்ஃப் ஆகியோரால் கலிபோர்னியா மாநகரத்து, சாண்டா குரூஸ் கவுண்டியில் உள்ள ஸ்காட்ஸ் வேலி என்ற சிறிய நகரில் நிறுவப்பட்டது. ரீட் ஹேஸ்டிங்ஸ்,  கடனாக வாங்கிய அப்பல்லோ 13 திரைப்படத்தை வாடகைக்கு எடுத்து ஆறு வாரங்கள் கழித்துத்  திருப்பித்  தந்ததால்  $40 அபராதமாகக் கட்டியுள்ளார். அப்போது தான் அவருக்கு 1 யோசனை தோன்றியுள்ளது . காலம் நீட்டிக்கப்பட்ட பட VHSகளை வாடகைக்குக் கொடுக்கலாமே என்று. ரீட் பெரும்பங்கையும், மார்க் குறைந்த பட்ச பங்கையும் வைத்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினர். அது தான் இன்றைய நெட்ஃபிலிக்சின் விதை.

அப்போது தான் ஜப்பான் நாடு DVD களை கண்டுபிடித்திருந்த காலம். புழக்கத்தில் வந்தது. அதை வாங்கி 1997 இல் ஒரு DVD கடையை வைத்தனர். கால அளவின்றி மக்கள் படத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தனர். அன்றைய கால கட்டத்தில் இது மக்களை அதிகம் கவர்ந்தது. 1998 இல் படத்தட்டுகளை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்தும் வந்தனர்.

ஏப்ரல் 14,1998 அன்று இவர்களுக்காகத்  தனியாக ஒரு இணைய தளத்தை அமைக்க முயற்சித்தனர். தங்கள் கையிருப்புகளை பட்டியலிட்டு மக்கள் தங்களுக்கு வேண்டும் படத்தட்டுகளை ஆர்டர் செய்யும் வசதியை கொண்டுவர முடிவு செய்து இணைய தளத்தைத் தொடங்கினர். தொடங்கிய சிறிது நேரத்திலேயே தளம் கிராஷ் ஆகிவிட்டது. ஆனால் அவர்களது அன்றைய ஆர்டர் மட்டும் 137. இது அன்றைய தேதியில் பெரிய எண்ணிக்கை தான். 1999 இறுதியில் 3100 படங்களோடும்  23900 வாடிக்கையாளர்களோடு இயங்கி வந்தது நெட்ஃபிலிக்ஸ். மெல்லிய வெள்ளை உறைக்குள் வைத்து மக்களிடம் சேர்க்கப்பட்டது. பின் சிறிது நாளில் அது மஞ்சள் உறை ஆனது.

ஸ்பைடர்மேன், எக்ஸ்-மேன்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கொடுத்தது யார் தெரியுமா?

21 ஆம் நூற்றாண்டின் பிளாஸ்ட்…

21 ஆம் நூற்றாண்டு வெறும் தேதியில் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வராமல் வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இன்று நெட்ஃபிலிக்ஸ் என்றதும் வரும் சிவப்பு நிறம் 2000 இல் தான் இவர்களின் லோகோவிற்குள் வந்தது. 'கியூ'(QUEUE ) எனும் முறை கொண்டு மெயில் மற்றும் இணையதளம் மூலம் பதிவிடும் வாடிக்கையாளர்களுக்கு வரிசை முறையில் படங்கள் அனுப்பப்பட்டு வந்தன.

2001 இல் 1 மில்லியன் வாசகர்களை நெட்ஃபிலிக்ஸ் தனதாக்கியது. 2002 இல் தனது வேகத்தைக் கூட்ட 'ஓவர் நைட் டெலிவரி' முறையைக் கையில் எடுத்து. ஆர்டர் செய்த படம் 1 நாளைக்குள் கையில் கிடைக்கும் திட்டம் செயல்முறை ஆனது.

2004 இல் மார்க் ராண்டால்ஃப் தனது பங்கை விற்றுவிட்டு நெட்ஃபிலிக்சில் இருந்து வெளியேறினார். ரீட் தனித்து இதை நடத்த ஆரம்பித்தார்.2006 வரை இப்படியே அவரது பயணம் தொடந்தது. 6.3 மில்லியன் வாடிக்கையாளர்கள், $80 மில்லியன் லாபம் என்று வெற்றிகரமாகப் போனது.

வாட்ச் நவ்:

2007 இல் நெட்ஃபிலிக்ஸை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முயற்சித்தார் ரீட். DVD இன்றி இணையத்தில் படங்களை பார்க்கும் வசதியைக் கொண்டுவந்தார். இது DVD க்காகக் காத்திருக்கும் நேரத்தைத் குறைத்தது. இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. 1000 தலைப்புகளில் படங்கள் விநியோகிக்கப்பட்டன. மாதத்திற்கு $5.99 என்று கட்டணம் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் படத்தட்டுகளுக்குத் தனிதளம், இணைய படத்திற்குத் தனி தளம் என்று மாற்றினார். இது மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை.  வணிகத்தில் தொய்வை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் இரண்டையும் இணைத்தார்.

உலகம் தொட்ட நெட்ஃபிலிக்ஸ்:

2009 வரை கனடாவில் மட்டும் இருந்த நெட்ஃபிலிக்ஸ் சேவை, 2010 முதல் அமெரிக்காவிற்கும் விரிவடைந்தது. 2015 இல் 50 நாடுகளுக்கு பரவியது. அசுர வேகத்தில் வளர ஆரம்பித்து, 2016 இல், 130 நாடுகளில் உள்ள உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டது. 2017 இல் 100 மில்லியன் என்ற புதிய உச்சம் தொட்டது. வேறு எந்த தளமும் அவ்வளவு வாடிக்கையாளர்களை அப்போது தன்னிடத்தில் வைத்திருக்க வில்லை.

கொரோனா ஊரடங்கு வந்த பின்னர் அதன் வேகம் இன்னதென்று சொல்லும் அளவு இல்லை. 2021 இல் 190 நாடுகளில் தன் ராஜ்யத்தை அமைத்து உலகின் பெரிய சிம்மாசனத்தைப் போட்டு அமர்ந்துகொண்டது. 210 மில்லியன் வாடிக்கையாளர்களை நெட்ஃபிலிக்ஸ் தன்னகத்தே கொண்டுள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல்:

படங்களை வாங்கி விற்பதோடு மட்டுமல்லாமல் 2012 இல் இருந்து தாங்களே ஒரு தயாரிப்பு நிறுவனமாகவும் மாறியது நெட்ஃபிலிக்ஸ். 'லில்லி ஹேமர்' என்ற முதல் படத்தை வெளியிட்டது. அதன் நல்ல வரவேற்பு மேலும் பல படங்களை எடுக்கத் தூண்டியது. 2013 இல் 'ஹவுஸ் ஆப் கார்ட்ஸ்' என்ற பிளாக் பஸ்டரைக் கொடுத்தது. பிறகு சொல்லவா வேண்டும் பல நாடுகளின் உள்ளூர் மொழிகள் வரை தனக்கான ஒரிஜினல் படங்கள், சீரிஸ்கள் என்று எல்லாவறையில் தனதாக்கி வைத்துள்ளது. 'பிஞ்சி வாட்சிங்' என்று சொல்லும் முறையே இவர்களால் தான் உருவானது. வாரம் 1 மாதம் ஒன்று என்று எபிசோடுகளுக்குக் காத்திருக்காமல் ஒரே நேரத்தில் எல்லா எபிசோடுகளையும் மொத்தமாக வெளியிட்டு ஒரே சமயத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை பார்க்கும் பழக்கம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

கணினியில் மட்டுமில்லாது, தொலைபேசி, டேப்லெட், ஸ்மார்ட் டிவி என்று எல்லா திரைகளிலும் ஓடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  நெட்ஃபிலிக்ஸ் இல் இல்லாதது எது என்று தேடும் அளவிற்கு பொழுதுபோக்கிற்கு எல்லாவற்றையும் தன்னோடு வைத்துள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு கட்டணங்களையும் குறைத்து இன்னும் தன் வாடிக்கையாளர்களை விரிவாக்கி வருகிறது.என்ன பாஸ்வர்ட் பகிர்ந்தால் கட்டணம் என்று மட்டும் அறிவிக்காமல் இருக்கலாம். இன்று முதல் சிவகார்த்திகேயனின் டான் கூட நெட்ஃபிலிக்ஸ் வசமுண்டு.

First published:

Tags: Android Apps, Netflix, OTT Release