பிரபல நடிகை நிரோஷா சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கலைஞர்கள் இடையே நட்புணர்வை வளர்ப்பதற்காக கிரிக்கெட் போட்டி ஒன்றினை நடத்தியுள்ளார்.
80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நிரோஷா, எம்.ஆர்.ராதாவின் மகள், ராதிகாவின் தங்கை போன்ற அடையாளங்கள் இல்லாமல் தனக்கே உரித்தான நடிப்பில் தென்னிந்திய திரையுலகில் முத்திரை பதித்தவர். அதன் பின்னர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த ராம்கியை திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்த நிரோஷா, வெள்ளித்திரையைப் போலவே சின்ன பாப்பா பெரியப்பா சீசன் 1, 2, 4, தாமரை ஆகிய சீரியல்கள் மூலம் சின்னத்திரையிலும் ஹிட்டடித்தார்.
இப்படி வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த நிரோஷா, தற்போது இரண்டு தளங்களுக்கும் இடையே நட்புணர்வை வளர்க்கும் படி மெகா கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்தியுள்ளார். பிரபல தொலைக்காட்சிகள் அல்லது ஏதாவது நிதி திரட்டும் நிகழ்வுகளுக்காக நட்சத்திரங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்படு வழக்கம். ஆனால் நிரோஷா டி.வி மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு இடையிலான பந்தத்தை வலுப்படுத்தும் விதமாக மெகா கிரிக்கெட் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் நட்சத்திரங்கள் கிரிக்கெட் போட்டியில் உற்சாகமாக பங்கேற்று விளையாடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை சென்னையில் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் போட்டியை நடத்தியுள்ளார். இதில் விஜய் தொலைக்காட்சியைச் சேர்ந்த மகாபா ஆனந்த் மற்றும் சித்தார்த், சன் தொலைக்காட்சியை சேர்ந்த ஆர்யன், அசார் மற்றும் ‘கோலி சோடா’ புகழ் கிஷோர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
Read More : வெண்பாவின் மகனை பார்த்திருக்கீங்களா..? க்யூட்டான பேமிலி போட்டோ இதோ!
சென்னை சூப்பர் ஸ்டார்ட்ஸ், சன் சூப்பர் ஹீரோஸ், பீஸ்ட் ஸ்லேயர்ஸ், சில்க் ஸ்மிதா, மாஸ்டர் பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒயிட் வாக்கர்ஸ் ஆகிய ஆறு அணிகளுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டுள்ளது. பைனலில் நடிகர் அசார் தலைமையிலான சூப்பர் ஹீரோஸ் அணியும், மகாபா தலைமையிலான சில்க் ஸ்மிதா அணியும் மோதின.
சுமார் 90 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன் சூப்பர் ஹீரோஸ் அணி கோப்பையையும், ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்றது. இதில் சன் சூப்பர் ஹீரோஸ் அணியைச் சேர்ந்த அஜய் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ பட்டத்தை தட்டிச்சென்றார். அவருக்கு டெஸ்லாட் நிறுவனத்தைச் சேர்ந்த கிக் ஸ்டார்ட் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது. தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட சில்க் ஸ்மிதா அணியைச் சேர்ந்த சுஜித்திற்கு பிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது.
நடிகை நிரோஷா இந்த போட்டியை வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு இடையிலான நட்புணர்வை வளர்க்கும் விதமாகவும், விளையாட்டின் மீது ஆர்வத்தையும் தூண்டவும் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நிரோஷா பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் சினிமா மற்றும் டி.வி நிகழ்ச்சிகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.