எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாகுபலி' தொடர்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' எனப்படும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில், தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சுமார் 400 கோடி பொருட்செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2021 ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்றால், எல்லா படங்களையும் போல இதன் பணிகளும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம், அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி வெளியாவதாக படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்