முதல்வன் பட பாணியில் ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி!

முதல்வன் பட பாணியில் ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி!

சிருஷ்டி கோஸ்வாமி

சிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒருநாள் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக செயல்படுகிறார்.

  • Share this:
    முதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஒருநாள் முதல்வராகியிருக்கிறார்.

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில் ஒருநாள் முதல்வராக பதவியேற்ற ஹீரோ, ஆளும் கட்சியினரின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, முதல்வரையே கைது செய்வார். அரசியல் சார்ந்த படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இந்நிலையில் இதே பாணியில் 19 வயதான கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒருநாள் உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக செயல்படுகிறார். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகருக்கு அருகிலுள்ள தெளலத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி கோஸ்வாமி. இவரது தந்தை ஒரு வியாபாரி. தாய் அங்கன்வாடியில் பணியாற்றுகிறார்.

    இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இவருக்கு ஒரு நாள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில வரலாற்றிலேயே முதல் பெண் முதல்வரும் சிருஷ்டி தான்.

    சிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்த நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவிருக்கிறது.

    ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்களை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டி, அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தராகண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம் போன்ற திட்டங்களை இன்று ஆய்வு செய்யவிருக்கிறார்.

    தவிர, உத்தரகாண்ட் மாநிலத்தின் குழந்தைகள் சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து முதல்வராக சிருஷ்டி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: