சூர்யாவின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய திரைப்படம் ஜெய்பீம். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. படத்தில் வில்லனாக காட்டப்பட்ட காவல் அதிகாரியின் வீட்டில் அக்னிகலசப் படம் கொண்ட காலண்டர் படம் இருந்ததற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்தப் படம் மாற்றப்பட்டது.
அதனையடுத்து, அந்த காவல்துறை அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்று இருந்ததற்கும் அக்னிகலசப் படம் காட்டப்பட்டதற்கும் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். சூர்யாவுக்கு கேள்வி எழுப்பி கடிதமும் எழுதினார். அதனையடுத்து, அன்புமணிக்கு விளக்கம் அளித்து சூர்யா கடிதம் எழுதினார். ஆனாலும், பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் சூர்யாவை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று பா.ம.க மாவட்டச் செயலாளர் அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து #westandwithsuriya ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
இந்தநிலையில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பா.ம.க இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான அன்புமணிக்கு கோரிக்கைவைத்து கடிதம் வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில், ‘நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய வர்த்தக சபையின் உறுப்பினர் சூர்யா உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.
அந்த முத்திரையை படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்துக்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கு எள்ளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்துவருவது எங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன், விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றிவரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Suriya