Home /News /entertainment /

'உதவ முடியாமல் தவிக்கிறேன்' - நடிகர் சோனுசூட் வேதனை!

'உதவ முடியாமல் தவிக்கிறேன்' - நடிகர் சோனுசூட் வேதனை!

சோனு சூட்

சோனு சூட்

மருத்துவர்கள், செவிலியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாமானியர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
உதவிக்காக அழைக்கும் பலருக்கும் உதவ முடியாத நிலையில் ஏற்பட்டிருப்பதை எண்ணி மிகவும் வேதனைப்படுவதாக பாலிவுட் திரைப்பட நடிகர் சோனுசூட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் சார்ஸ் 2 வைரஸின் உருமாறிய வடிவம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாமானியர்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கண்ணுக்கு புலப்படாத இந்த வைரஸ் ஏற்படுத்தி வரும் மிகப்பெரும் அழிவு சுகாதாரம் மற்றும் பொருளாதார ரீதியாக நாட்டின் பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.

தங்களின் நேசத்துக்குரியவர்கள், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரை காப்பாற்ற லட்சக்கணக்கானோர் போராடி வருகின்றனர். அவர்களின் உயிரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகளையும், பண உதவிகளையும் கேட்டுப் பெறுகின்றனர். மனிதாபிமானமிக்க பலர் தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில், கொரோனா முதல் அலையின்போது பலருக்கும் உதவி செய்த சோனுசூட், இந்தமுறையும் மருத்துவ உதவிகளை பலருக்கும் செய்து கொடுத்து வருகிறார்.

ஆனால், உதவி கேட்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதாக தெரிவித்துள்ள அவர், அனைவருக்கும் தகுந்த நேரத்தில் உதவமுடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தன்னைத் தொடர்பு கொண்டு உதவி கேட்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்து, அந்த உதவி அவர்களுக்கு கிடைக்கும் முன்னர் இறப்பை தழுவுவது கொடுமையான அனுபவம் என மனக்கவலையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் "நீங்கள் காப்பாற்ற நினைக்கும் ஒருவர் உயிரிழக்கும்போது, அதனால் ஏற்படக்கூடிய வலி உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இணையானது.

நீங்கள் காப்பாற்றுவதாக வாக்குறுதி அளித்த குடும்ப உறுப்பினர்களை, நோயாளி இறந்த பின்னர் சந்திப்பது என்பது மிகவும் கடினமானது. இன்றும் சிலரை நான் இழந்துள்ளேன். நாள்தோறும் 10 முறை தொடர்பு கொண்டு காப்பாற்றுவதற்காக உதவி கோரியவர்கள் சந்திக்க முடியாத தொலைவுக்கு சென்றுள்ளனர். உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்" என மனக்குமுறலை பதிவு செய்துள்ளார்.

Also read... இறந்த பிறகு 8-12 வாரங்களுக்குள் தடுப்பூசியின் 2வது டோஸை பெற முடியுமா? நடிகர் சித்தார்த் கேள்வி!

அவரின் இந்த சோகப்பதிவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதவையும், அவரின் இடைவிடாத முயற்சி மற்றும் மனித நேயத்தையும் பாராட்டியுள்ளனர். மனிதர்களுக்கு உதவி செய்வது என்பது இறைவனுக்கு சேவை செய்வதற்கு ஒப்பானது எனக் கூறியுள்ள சோனுசூட், பிறப்பு இறப்பு என்பது யார் கையிலும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, ஆனால், இப்போது இருக்கும் நிலை மிகவும் கொடூரமானது என தெரிவித்துள்ளார். குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது கண்ணீரை அடக்க முடியவில்லை, உயிரைக் காப்பாற்றும் வரை போராடுங்கள் என மற்றொரு பதிவில் சோனுசூட் கூறியுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Sonu sood

அடுத்த செய்தி