எஸ்.ஜே.சூர்யா - யாஷிகா நடிக்கும் ‘கடமையை செய்’

எஸ்.ஜே.சூர்யா - யாஷிகா நடிக்கும் ‘கடமையை செய்’

எஸ்.ஜே.சூர்யாவுடன் யாஷிகா

எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா நடிக்கும் ‘கடமையை செய்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

  • Share this:
வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா 2004-ம் ஆண்டு வெளியான ‘நியூ’ படத்தின் மூலம் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களை இயக்கி ஹீரோவாக நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

மெர்சல், இறைவி, பீட்சா 2, ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு 2019-ம் ஆண்டு வெளியான ‘மான்ஸ்டர்’ திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் அமிதாப்பச்சன் உடன் உயர்ந்த மனிதன், சிம்புவுடன் மாநாடு, பொம்மை உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கடமையை செய்’ என்ற டைட்டிலுடன் உருவாகும் இத்திரைப்படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்தும் நடிக்கும் இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள். சுந்தர்.சி தயாரித்து நாயகனாக நடித்த ‘முத்தின கத்திரிக்கா ’ என்ற படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கிறார்.

‘கடமையை செய்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
Published by:Sheik Hanifah
First published: