மருத்துவர்களுக்காக சிவகார்த்திகேயன் #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதன் வாயிலாக மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்டோரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கினர். இதையடுத்து மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர், மருத்துவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வேதனை தெரிவித்து கண்டனங்களையும் பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, “வணக்கம் நான் சிவகார்த்திகேயன் பேசுகிறேன். இந்த லுக்கில் அடையாளம் தெரியாது என்பதால் தான் பெயர் சொல்லி ஆரம்பிக்கிறேன். என்னை மாதிரி தான் நிறைய பேர் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச காலம் நாம் சரியாக இந்த வழிமுறைகளை எல்லாம் கடைபிடித்து விட்டால் சீக்கிரமே இது முடிந்துவிடும் என்று நம்புகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். பெரியவர்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்.
நமக்காக வெளியில் கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிற அரசு அதிகாரிகள், காவல் துறையினர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஊடகத்துறை நண்பர்கள் இவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இவர்களோடு சேர்த்து இன்னொருத்தருக்கும் நன்றி சொல்லத்தான் இந்த வீடியோ.
அவர்களுடைய உயிர், வாழ்க்கை, குடும்பம் இப்படி எதைப்பற்றியுமே யோசிக்காமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியில் வந்து அவர்கள் சேவையைச் செய்யும் மனிதக் கடவுள்கள் மருத்துவர்கள். அவர்களுக்கு பெரிய நன்றி மற்றும் சல்யூட். அவர்கள் மேல் நமக்கு எப்போதும் அன்பும், மரியாதையும் நிறையவே இருக்கிறது என்பதை சொல்வதற்காகத்தான் இந்த வீடியோ மற்றும் இந்த #WeLoveDoctors ஹேஷ்டேக்.
ஏனெனில் சமீபத்தில் வந்த சில செய்திகள், சம்பவங்கள் அவர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கும். நமக்கும் அதைப் பார்க்கும் போது கஷ்டமாகத் தான் இருந்தது. இந்தக் கொரோனாவைப் பற்றி பயப்படாமல், யோசிக்காமல் அவர்களுடைய வேலையை சிறப்பாகச் செய்து வரும் அவர்களின் செயல் மூலமாக நமக்காக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
இந்த டைம் அவர்களுக்காக நாம் இருக்கிறோம் என்று சொல்லும் நேரம். நீங்களும் உங்கள் அன்பு மற்றும் ஆதரவை, அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை இந்த #WeLoveDoctors என்ற ஹேஷ்டேக்குடன் சேர்த்து பதிவிடுங்கள்.
இந்த ஹேஷ்டேக் மூலமாகவும் நம்முடைய அன்பும் மரியாதையும் அவர்களை சென்று சேரட்டும். இந்த தருணத்தில் அவர்களுக்குத் தேவை அது தான். அனைவருமே செய்வோம் என நம்புகிறேன். உலகின் தலைசிறந்த சொல் செயல். செய்து காட்டுவோம். We Love Doctors” இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் உருவாக்கிய இந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.