சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் - சிவகார்த்திகேயன்

  • Share this:
    சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 14-வது படத்தின் டைட்டிலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது 14-வது திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கியது.

    சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆக்‌ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுவார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் ரவிக்குமார் “அறிவியல் சார்ந்த படம் என்பதால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.

    ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ‘அலெக்சா எல்.எப்.’ என்ற கேமரா, இந்தப் படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம் இதுதான்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



    ஆரம்பத்தில் இந்தப் படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்ததால் தற்போது ’டாக்டர்’ படத்தை அடுத்து 2-வது முறையாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனுடன் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்... குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள்

    Published by:Sheik Hanifah
    First published: