Sivakarthikeyan: எதிர்நீச்சல் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு இன்று 36-வது பிறந்தநாள்

Sivakarthikeyan: எதிர்நீச்சல் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு இன்று 36-வது பிறந்தநாள்

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக உருமாறியிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

  • Share this:
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலிப்பது சிரமம் என்ற பிம்பம் கோலோச்சிய காலகட்டத்தில் தனது விடாமுயற்சியால் ஒவ்வொரு தடைகளையும் தகர்த்தெறிந்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் எனும் சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

ஸ்டேண்ட் அப் காமெடி, மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என சின்னத்திரையின் மூலமே தமிழக மக்களின் ஆதர்சன நாயகனாக வலம்வந்தவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெள்ளித்திரையில் 3, மெரினா ஆகிய படங்களின் மூலம் காமெடி நடிகராக அறிமுகம் ஆனாலும் அவரை நாயகனாக ஏற்றுக்கொள்ள வைத்த படம் எதிர்நீச்சல்.

எந்த பின்புலமும் இல்லாமல், தனது திறமை மீது நம்பிக்கை வைத்து போராடும் இளைஞன் எனும் சிவகார்த்திகேயனின் நிஜ வாழ்வோடு ஒன்றிய கதாபாத்திரம் என்பதால் அதற்கு திரையில் முழு அர்ப்பணிப்போடு உயிர் கொடுத்தார் சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ என சிவாவின் அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் வெற்றிபெற்று பாக்ஸ் ஆபீஸின் புது வசூல் நாயகனாக அவரை அடையாளப்படுத்தியது. அத்தோடு 6 முதல் 60 வயது வரையிலான ரசிகர்களை அவருக்கு பெற்றுத்தந்தது.

தொடர்ந்து ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற விமர்சனத்திற்கு பதில் சொல்லும் விதமாக ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்து அதிலும் வெற்றிபெற்றார். அந்நாளில் இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பும் பாக்ஸ் ஆபீஸில் இப்படம் ஏற்படுத்திய தாக்கமும் சிவகார்த்திகேயனை வணிக அளவில் தமிழ் சினிமாவின் டாப் 5 இடத்திற்குள் கொண்டுவந்து நிறுத்தியது.

கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார். மேலும் பாடலாசிரியர், பாடகர் என எந்த அவதாரம் எடுத்தாலும் அதில் தனி முத்திரை பதித்து தமிழ் சினிமாவின் எண்டர்டெயின்மெண்ட் இளவரசனாக வலம்வருகிறார்.

இன்றைய காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் படம் வெளியாகும் முதல் மூன்று நாட்களில் அவை பாக்ஸ் ஆபீஸில் ரூ.50 கோடி வசூலை மிஞ்சுகின்றன. ஆனால், அவையல்ல அவரது வெற்றி. சினிமா குறித்த கனவுகளுடனும், திறமையுடனும் வாய்ப்புக்காக போராடும் பலருக்கும் ஒரு ரோல் மாடலாக திகழ்வதே இன்று சிவகார்த்திகேயனின் சாதனையாக பார்க்கப்படுகிறது.
Published by:Sheik Hanifah
First published: