’குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு இந்த வாரமும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’ மிகவும் பிரபலமானது. இதில் சமையல் செய்யும் போட்டியாளர்களும், கோமாளிகளும் இணைந்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்கள். இதில் குக்குகளுக்கும், கோமாளிகளுக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது.
குறிப்பாக புகழ், பாலா, ஷிவாங்கி ஆகிய கோமாளிகளுக்கு ஏகப்பட்ட ஆர்மிக்கள் உருவாகியிருக்கின்றன. எல்லா கவலைகளையும் மறந்து மனம் விட்டு சிரிக்கலாம் என்ற கருத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது இந்த குக் வித் கோமாளி.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4, 106 நாட்களை நிறைவு செய்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆரம்பித்த அந்நிகழ்ச்சி, இரவு 12 மணிவரை ஒளிபரப்பானது. இதனால் கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சனிக்கிழமை மட்டுமே ஒளிபரப்பப்பட்டது.
சரி இந்த வாரம் வழக்கம் போல சனி, ஞாயிறு ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பு பொய்யாகியிருக்கிறது. இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இடைவிடாது 9 மணிநேரம் ஒளிபரப்பாகிறது. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லாதது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்