"ரூ.2 கோடிக்கு ரூ.7 லட்சம் மட்டுமே சேர்ந்திருக்கு"- மீண்டும் நிதியுதவி கேட்ட சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்

சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்

தன்னுடைய ப்ராஜெக்ட் செய்ய 2 கோடி ரூபாய் தேவைப்படுவதால், தனது ரசிகர்களிடம் நிதியுதவி கேட்டு சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான கார்த்திக் ராஜ், அடுத்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆஃபீஸ்’ தொலைக்காட்சியில் லீட் ரோலில் நடித்தார். இவரும் ஸ்ருதி ராஜூம் இணைந்து நடித்த காதல் காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, தொடரின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்தார். இந்த சீரியலிலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றிருந்த அவர், திரைப்படங்களில் நடிப்பதற்காக அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அவர் ஏற்கனவே நடித்த திரைப்படங்களான ’465’, ’நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் ரம்யா பாண்டியனுடன் ஜோடி சேர்ந்து ‘முகிலன்’ என்ற வெப்சீரிஸில் நடித்தார். இதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில், அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட கார்த்திக் ராஜ், தன்னை படங்களில் நடிக்க விடாமல் சிலர் தடுப்பதாக குற்றம்சாட்டினார். தான் நடிக்க இருந்த ப்ராஜெக்ட்டுகளில் சிலர் பின்வேலைகள் பார்த்து தடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




ஆனால், அவர்களின் சவால்களை முறியடித்து நிச்சயம் திரைப்படத்தில் நடிப்பேன் எனக் கூறியுள்ள அவர், தானே சொந்தமாக திரைப்படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாகவும் கூறினார். அதற்காக, ரசிகர்கள் தங்களால் முடிந்த நிதியுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், அதற்கான வங்கிக் கணக்கு எண் விவரங்களையும் வெளியிட்டார்.

Also Read: குக் வித் கோமாளி சீசன்-3 நிகழ்ச்சியில் நுழையும் பிக்பாஸ் பிரபலம்?

சிறிய தொகையாக இருந்தாலும் சரி, எவ்வளவு முடியுமோ அந்த தொகையை கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். தற்போது மற்றொரு வீடியோ வெளியிட்டுள்ள அவர், சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார். தன்னை சினிமாவில் வெற்றி பெறக்கூடாது என நினைப்பவர்களை ஜெயித்துக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்காக, தான் கேட்டுக்கொண்டதன் பேரில் நிதியுதவி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள கார்த்திக் ராஜ், இந்த நிதி போதுமானதாக இல்லை எனக் கூறியுள்ளார்.

 



இதுவரை சுமார் 7 முதல் 8 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்திருப்பதாகவும், தன்னுடைய ப்ராஜெக்ட் ஒன்றரை கோடி முதல் 2 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார். தன்னுடைய ரசிகர்கள் 1 லட்சம் பேர் 200 ரூபாய் அனுப்பினால் கூட தனக்கு தேவையான தொகை கிடைத்துவிடும் என தெரிவித்துள்ள கார்த்திக் ராஜ், போதுமான தொகை கிடைக்கவில்லை என்றால் வாங்கிய பணத்தை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Also Read: மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய உதயநிதி-வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

யாரையும் ஏமாற்றும் நோக்கம் என்னுடையதல்ல என கார்த்திக் ராஜ் கூறியுள்ளார். என்னுடைய இலக்கை அடைய தேவையான தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் இருப்பதாகவும், நிச்சயம் அந்த தொகை கிடைத்தால் நல்ல தரமான படத்தை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே நிதி கேட்டு வீடியோ வெளியிட்டிருந்த அவர், தற்போது பணம் கேட்டு 2வது வீடியோவும் வெளியிட்டுள்ளார். அவர் எதிர்பார்க்கும் பணம் கிடைக்குமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: