நடிகர் சூர்யா செல்ஃபி தொடர்பாகவும், சமூக வலைதளங்களின் செயல்பாடு பற்றியும் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதில் கூறும் விதமாக எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "சமீபத்தில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். சினிமா நடிகர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவே வாழ முடியவில்லை; விமான நிலையத்தில் அற்பசங்கை பண்ணி விட்டு வந்தால் கூட கை குலுக்குகிறார்கள்; செல்ஃபி எடுக்க வேண்டும் என்று டார்ச்சர் பண்ணுகிறார்கள் என்பது உங்கள் புகார். உங்கள் தந்தை சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனைத் தட்டி விட்டது தவறுதான் என்றாலும் ரசிகர்களின் டார்ச்சரும் தாங்க முடியாததாக இருக்கிறது என்பது உங்கள் கட்டுரையின் சாரம்.
தம்பி சூர்யா, நீங்களும் உங்களைப் போன்ற ஹீரோக்களும் வாங்கும் சம்பளம் 50 கோடி, 60 கோடி ரூபாய். ஆனால் துப்புரவுத் தொழிலாளியின் மாதச் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? வெறும் 6000 ரூபாய். அறுபது கோடிக்கும் ஆறாயிரம் ரூபாய்க்கும் எத்தனை வித்தியாசம்?
தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். நீங்களெல்லாம் கடவுள்கள். எம்ஜியார் ஒரு கடவுள். சிவாஜி ஒரு கடவுள். கமலை மட்டும் ஆண்டவர் என்று சொல்லுவோம். ஏனென்றால் அவர் நாஸ்திகர். ரஜினி கடவுள். விஜய் கடவுள். அஜித் கடவுள். நீங்கள் கடவுள். உங்கள் தம்பி கார்த்தி கடவுள். ஏன், முன்பு அப்பாஸ் என்று ஒரு நடிகர் இருந்தாரே அவர் கூட கடவுள்தான். அப்படித்தான் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள்.
நீங்கள் நினைத்தால் முதல்மந்திரியிடம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கலாம். ஒரு தமிழ் எழுத்தாளனால் முடியுமா? நான் 100 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். என் சகாக்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் 200 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் சமூகத்தில் என்ன அடையாளம்?
அசோகமித்திரன் சென்ற ஆண்டு மரணம் அடைந்த போது அவருக்குக் கூடிய கூட்டம் 25 பேர். அதில் 15 பேர் அவரது உறவினர். மற்ற பத்துப் பேர் அவரது ஆயுட்கால நண்பர்கள். இப்படிப்பட்ட தேசத்தில் கடவுள்களைப் போல், சுல்தான்களைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்கள் - அவர்களை அப்படி வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் எப்பவாவது செல்ஃபி எடுத்துக் கொள்ள முனைந்தால் அது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. தம்பி சூர்யா… உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரிந்தால் கொஞ்சம் அசோகமித்திரனின் கதைகளைப் படித்துப் பாருங்கள். கரைந்த நிழல்கள் என்ற நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம். ஏனென்றால், அது அவருடைய சினிமாக் கம்பெனி அனுபவங்களை வைத்து எழுதியது” என்று விரிவான கடிதமாக அதை எழுதியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.