ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியானது. வலிமை படத்துக்குப் பின் வெளியாகும் அஜித் படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 1 மணி முதலே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதுமே முக்கிய நகரங்களில் அஜித் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்படியான ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள் விபத்தில் தன்னுடைய உயிரையே விட்டார். சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியபடி கீழே குதித்தார். அப்போது அவருக்கு முதுகுத்தண்டில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கே எம் சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது சிந்தாதரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் ( 19) என்பது தெரியவந்தது. மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த பரத் அவருடைய குடும்பத்தை கவனித்து வந்தவர். அஜித் ரசிகரின் இறப்புக்கு பல்வேறுதரப்பினரும் இரங்கல் தெரிவித்ததோடு, சினிமா மோகத்தில் இளைஞர்கள் கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது என்றும் அறிவுரை கூறினர். இந்நிலையில் துணிவு படம் பார்க்க சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த அஜித்தின் ரசிகர் வீட்டுக்கு நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், உயிரிழந்த ரசிகருடைய சகோதரரின் படிப்பை செலவை ஏற்கிறேன். இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான உதயநிதியை சந்தித்து உயிரிழந்த இளைஞரின் குடும்பவறுமை நிலை குறித்து எடுத்துரைப்பேன். சினிமா மீது ஆர்வம் இருக்கலாம். அதிக ஆர்வம் இருக்கக்கூடாது. இதுபோன்ற நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.