பாகுபலி படத்தை அடுத்து இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாகும் இந்தப் படத்தில் ராம் சரண் ‘தியாகி அல்லுரி சித்தாராம ராஜு’வாகவும், ஜூனியர் என்டிஆர் ‘தியாகி கொமரம் பீமாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ், மற்றும் பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார்.
டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியானது. கடந்த மே 20-ஆம் தேதி இந்தப் படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளனறு அவரது கேரக்டருக்கான டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் கொரோனா ஊரங்கால் அது சாத்தியமில்லை என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கபட்டு படப்பிடிப்பு ந்டத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் நேற்று முதல் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. அதற்கான காணொலியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘பீம்’ கதாபாத்திரத்துக்கான டீசர் அக்டோபர் 22-ம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Life has already become a new normal. We have to adapt to it and move on. And so our shoot resumes... :)https://t.co/qFlpsIHJpc
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கும் படக்குழுவினர் மாதாப்பூரில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்களைச் சந்திக்க படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புக் குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்த இரண்டு மாதங்கள் இடைவெளியின்றி படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.