மேலும் இரண்டு மாதங்களுக்கு திரையரங்குகளை மூடிவைக்க தயார் - பாரதிராஜா கோரிக்கையால் கொதிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்

மேலும் இரண்டு மாதங்களுக்கு திரையரங்குகளை மூடிவைக்க தயார் - பாரதிராஜா கோரிக்கையால் கொதிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்

திரையரங்கம் (கோப்பு படம்)

திரையரங்குகளை மேலும் இரண்டு மாதங்களுக்கு மூடி வைக்க தயார் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளை 10ம் தேதி முதல் திறந்துகொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனை முன்னிட்டு திரையரங்குகளைத் திறக்கும் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், VPF கட்டணங்களை எங்களால் செலுத்த இயலாது என்றும் அதனை திரையரங்கு உரிமையாளர்கள்தான் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலமுறை தெரிவித்தும் திரையரங்கு உரிமையாளர்களும் புரொஜெக்டர் நிறுவனங்களும் தொடர்ந்து VPF கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள். இனிமேல் எங்களால் அதனைச் செலுத்த இயலாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும்வரை திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜாவின் அறிக்கை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இந்நேரத்தில் பேசப்பட வேண்டிய பிரச்னை இல்லை இது. எங்கள் தரப்பிலும் நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தாலும் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளை மட்டும் நிரப்பி திரையரங்குகளை திறக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். ஆனால், தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து புதிய கோரிக்கைகளை முன்வைக்கும்போது அதனை எங்களால் ஏற்க முடியாது என்றார்.மேலும், தயாரிப்பாளர்கள் இந்த முடிவை எடுத்தால் மேலும் 2 மாதங்களுக்கு திரையரங்குகளை மூடிவைப்பது எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று திருப்பூர் சுப்பிரமணியன் பேசியிருக்கிறார்.

பத்தாம் தேதி முதல் திரையரங்கம் திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கும் நிலையில், ரசிகர்கள் திரையரங்கில் சென்று படம் பார்க்கும் ஆவலில் காத்திருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் இந்த புதிய பிரச்னையால் மேலும் சில நாட்களுக்கு திரையரங்குகள் திறக்கப்படாமல் போகலாம் என்று கருதப்படுகிறது.
Published by:Rizwan
First published: