மாற்றத்தை விரும்பினால் கமலுக்கு ஆதரவு தெரிவியுங்கள் - ரஜினிக்கு பிரபல இயக்குநர் வேண்டுகோள்

மாற்றத்தை விரும்பினால் கமலுக்கு ஆதரவு தெரிவியுங்கள் - ரஜினிக்கு பிரபல இயக்குநர் வேண்டுகோள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன்

உண்மையில் நீங்கள் மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதிமய்யத்துக்கு அறிவியுங்கள் என பிரபல இயக்குநர் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

  • Share this:
ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று டிசம்பர் 3-ம் தேதி அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு, “ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்ச உடற் செயல்பாடு மற்றும் மனஅழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.
இந்தச் செயல்பாடுகளுடன் சேர்த்து கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல்களை தவிர்க்கும் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியது.

இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினிகாந்தின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் திரைப்பட இயக்குநர் விஜய் மில்டன் தனது ட்விட்டர் பதிவில், “தைரியமான முடிவு. உங்கள் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரே ஒரு வேண்டுகோள். உண்மையில் நீங்கள் இங்கொரு மாற்றத்தை விரும்பினால் உங்கள் ஆதரவை வெளிப்படையாக மக்கள் நீதி மய்யத்துக்கு அறிவியுங்கள்” என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் ரஜினி முடிவு குறித்து கூறுகையில், “என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். அவர் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். சென்னை சென்று ரஜினியை சந்தித்து விட்டு உங்களிடம் பேசுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

தனது நீண்ட கால நண்பரான கமல்ஹாசனுக்கு, ரஜினிகாந்த் அரசியலில் ஆதரவளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: