‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.
ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்திருந்தாலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் ‘அண்ணாத்த’ படம் குறித்த அப்டேட்கள் எதுவும் வெளியிடப்படாததால் ரசிகர்கள் படக்குழுவின் தகவலுக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் படத்தின் எடிட்டர் ஆண்டனி எல்.ரூபனிடம் ட்விட்டரில் ‘அண்ணாத்த’ படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த படத்தொகுப்பாளர் ஆண்டனி எல்.ரூபன், “விரைவில் அப்டேட் வரும். நானும் அதற்காகத் தான் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘அண்ணாத்த’ திரைப்படம் கொரோனா காரணமாக 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கடலுக்குள் ஹனிமூன் கொண்டாட்டம் - காஜல் அகர்வால் வெளியிட்ட நியூ போட்டோஸ்
இதனிடையே சமீபத்தில் தனக்கு செய்யப்பட்டிருக்கும் சிறுநீரக அறுவை சிகிச்சை, வயது முதிர்வு, கொரோனா பெருந்தொற்று காலம் இவற்றைக் காரணம் காட்டி அரசியல் பிரவேசம் வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக ரஜினிகாந்தின் அறிக்கை ஒன்று வைரலானது. இதற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த், “அந்த அறிக்கை என்னுடையது அல்ல. அதில் வெளிவந்திருக்கும் எனது உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் அனைத்தும் உண்மை. ” என்று கூறியிருந்தார்.
எனவே கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் தான் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.