ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்ன சொல்கிறது குயின்?

என்ன சொல்கிறது குயின்?

குயின் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

குயின் படத்தில் ரம்யா கிருஷ்ணன்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி வெளிவந்துள்ள குயின் வலை தொடர், ஜெயலலிதா - சிமி கேர்வாலுக்கு அளித்த பேட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. குழந்தை பருவத்தில் ஜெயலலிதா வறுமையில் வாடியதை இந்த தொடர் விரிவாக பேசியுள்ளது.

11 பகுதிகளாக வெளிவந்துள்ள குயின் தொடரின் 4வது பகுதியில் அறிமுகமாகும் GMR எனும் MGR கதாபாத்திரம் கருணாமூர்த்தி என்ற பெயரில் கருணாநிதி கதாபாத்திரமும் ஜனனி என்ற பெயரில் ஜானகி கதாபாத்திரமும் புனையப்பட்டுள்ளது.

தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமாரன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி குயின் என்ற பெயரில் கௌதம் மேனன் வலை தொடர் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியான நாள் தொடங்கி தமிழக அளவில் பரபரப்பும், எதிர்பார்ப்பும் தொற்றிக்கொண்டது. வழக்குகள், விசாரணை எல்லாம் கடந்து இன்று ரிலீஸாகியுள்ள குயின் 11 பாகங்களாக வெளியாகியுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்த தொடரில் சக்தி சேஷாத்ரி என்ற பெயரில் ஜெயலலிதா கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரம்யா கிருஷ்ணன்

ஜெயலலிதா சிமி கேர்வாலுக்கு வழங்கிய நேர்காணலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த கதையும் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் நினைவலைகளை சிமி கேர்வால் உடன் பகிர்ந்து கொண்டது போலவே இந்த வலைத்தொடர் உருவாகி உள்ளது.

குழந்தைப் பருவத்தில் ஜெயலலிதாவிற்கு படிப்பில் இருந்த ஆர்வம், பள்ளியில் இருந்த தலைமை பண்பு, வறுமையால் பள்ளியில் ஜெயலலிதா சந்தித்த அவமானங்கள் ஆகியவற்றை விரிவாக பேசியுள்ள இந்த வலை தொடர், வழக்கறிஞராக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவையும் முதல் மூன்று பாகங்களில் தெளிவாக விவரித்துள்ளது. திரைத் துறைக்குள் ஜெயலலிதா காலடி எடுத்து வைக்க, அவரது குடும்பத்தில் இருந்த வறுமையே பிரதான காரணம் என்று விவரிக்கும் குயின், திரைத்துறையில் ஜெயலலிதா அறிமுகமான பின்னர் அவர் எதிர்கொண்ட சிரமங்களையும், சவால்களையும் விரிவாக பேசியுள்ளது.

ஜிஎம்ஆர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்படும் எம்ஜிஆர் கதாபாத்திரம் ஜெயலலிதாவுடன் காட்டிய நெருக்கம் குறித்து விரிவாகப் பேசி உள்ள இந்த வலைத்தொடர், இதனால் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி - ஜெயலலிதா இடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் காட்சிகளாக விவரிக்கிறது.

ஆரம்பம் முதலே கடுமையாக சித்தரிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அம்மா கதாபாத்திரம் ஜெயலலிதாவிற்கு எத்தனை உறுதுணையாக இருந்தது என்பதையும், அன்னையின் மரணத்திற்குப் பின்னர் ஜெயலலிதாவின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதையும் பிரமாதமாக இந்த தொடரில் பேசப்பட்டுள்ளது. அன்னையின் மரணத்திற்கு பின்னர் ஜெயலலிதாவின் மன ஓட்டத்தையும், பின்னர் சசிகலாவுடன் இணைந்ததால் ஏற்பட்ட மன உறுதியையும் விரிவாக காட்சிப்படுத்தியுள்ளனர். எம்ஜிஆர் ஜெயலலிதாவிற்கு அரசியல் இணைய அழைப்பு விடுத்தது தொடங்கி பல சர்ச்சைகளை பேசியுள்ள இந்த வலைதொடர் எம்ஜிஆரின் மரணத்தில் நிறைவடைகிறது.

குயின் டீசரில் ரம்யா கிருஷ்ணன்

எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தின்போது ஜெயலலிதா அமரர் ஊர்தியில் இருந்து கீழே இறக்கி விட்ட பின்னர் தீவிர அரசியலுக்குள் நுழைந்ததை பிரதானப்படுத்தி இந்த வலைத் தொடர் நிறைவடைகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போர் பரவசம் படும் வகையில் உருவாக்கியுள்ள போதும் மெதுவாக நகரும் திரைக்கதை பார்ப்போரின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. மேலும் இந்த தொடர் ஹிந்தியில் உருவாக்கப்பட்டுள்ளதால் கதாபாத்திரங்களின் உதட்டசைவு தமிழுக்கு பொருந்தாமல் போவதும் தமிழ் ரசிகர்களை சோர்வடைய செய்கிறது.

First published:

Tags: Jayalalithaa, Queen