மார்ச் 27 - ம் தேதிக்குப் பிறகு புதுப்படங்களை வெளியிடுவதில்லை என்ற விநியோகஸ்தர்களின் முடிவை ஆதரிப்பதாக தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா கூறியுள்ளார்.
தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் சார்பில் வரும் 27-ம் தேதிக்குப் பின் புதிய படங்களை விநியோகிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டு நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்:
1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27-ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தரும் படங்களை விநியோகிப்பதில்லை என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு விநியோகஸ்தர்களுக்கு விதிக்கப்படும் TDS வரியை நீக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.
2. தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான GST (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு LBT (8%) கேளிக்கை வரி செலுத்துவதால் இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி வரியினை(8%) முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விநியோகஸ்தர்கள் எடுத்த இந்த முடிவுக்கு தயாரிப்பாளர் சிவா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் ‘காவல்துறை’ உங்கள் நண்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் சிவா, “தயாரிப்பாளர் சங்கம் அனாதையானதே சினிமாவில் இப்போதுள்ள பிரச்சினைகளுக்குக் காரணம். நல்லபடியாக இன்று நீதியரசர் ஜெயச்சந்திரன் பொறுப்பேற்று, கூடிய விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
திரையரங்கங்கள் இல்லையென்றால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். இதைப்பற்றி நாளை டெல்லி சென்று மனு அளிக்க இருக்கிறோம். மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 27-ம் தேதியிலிருந்து புதுப்படங்களை வெளியிடுவதில்லை என்ற வினியோகஸ்தர்களின் முடிவை நாங்கள் ஆதரிக்கிறோம்” என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.