இனி உயிரோட இருக்கறவங்களுக்கு அஞ்சலி - விமர்சகருக்கு பிரியா பவானி ஷங்கர் பதிலடி!

பிரியா பவானி சங்கர்

கி.ராஜநாராயணன் மறைவிற்கான அவரது போஸ்ட்டை விமர்சித்து சிலர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பிரியா பவானி சங்கர் பதில்

  • Share this:
முதுபெரும் தமிழ் எழுத்தாளர் மற்றும் சாகித்ய அகாடமி விருதை வென்றவருமான கி.ராஜநாராயணன் தனது 98-ஆவது வயதில் கடந்த திங்களன்று உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பிரபல நடிகையான பிரியா பவானி ஷங்கர் இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட தனது சமூக ஊடக பக்கங்களில் அஞ்சலி தெரிவித்து பதிவிட்டிருந்தார். கி.ராஜநாராயணன் மறைவிற்கான அவரது போஸ்ட்டை விமர்சித்து சிலர் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு பிரியா பவானி சங்கர் பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்ப்பேட்டையில் இருக்கும் அரசு குடியிருப்பில் வசித்து வந்த கி.ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் மறைந்த கி.ராஜநாராயணன் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மே 17 அன்று உயிரிழந்தார். இவர் சாகித்ய அகாடமி விருது தவிர தமிழக அரசின் விருது மற்றும் கனடா நாட்டின் உயரிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கை, ஏமாற்றங்கள், வாழ்க்கைப்பாடுகளை தன் அழகிய எழுத்தால் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர் உள்ளிட்ட பல `நாவல்கள் மூலம் விவரித்தார். இதனால் இவர் "கரிசல் இலக்கியத்தின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.

ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், குறு நாவல்களை எழுதி தமிழ் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கி.ரா-வின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாக கருதப்பட்டது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்களும் எழுத்தாளரை நினைவு கூர்ந்து சமூக ஊடக இடுகைகளைப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற தமிழ் நடிகை பிரியா பவானி ஷங்கர், மறைந்த எழுத்தாளருக்கு இறுதி மரியாதை செலுத்தும் விதமாக அவர் எழுதிய புத்தகங்களுடன் தொடர்புடைய தன் குழந்தை பருவ அனுபவங்களை "எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை" என்ற கேப்ஷனுடன் சமூக ஊடகங்கள் வழியே இரங்கல் தெரிவித்தார். அந்த போஸ்ட்டில் தன் நினைவலைகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தார் பிரியா பவானி ஷங்கர்.
பிரியா பவானி ஷங்கரின் இந்த அஞ்சலி போஸ்ட்டை கேலி செய்யும் விதமாக ஒரு யூஸர், " ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் மறைவிற்கு பிறகு அவரை மிகவும் புகழ்ந்து பேசி டயலாக் கூறுகிறீர்கள், முடியல டா" என்று கமெண்ட் செய்துள்ளார். குறிப்பிட்ட இந்த யூஸருக்கு பதில் அளித்துள்ள நடிகை பிரியா பவானி ஷங்கர், "நாளைலேர்ந்து உயிரோட இருக்கறவங்களுக்கு அஞ்சலி செலுத்திடறோம்ங்க ஐயா" என்று நக்கலாக கூறி உள்ளார்.

 அதே போல பிரியா அஞ்சலி தெரிவித்துள்ள போஸ்ட்டில் கி.ராஐநாராயணன் என்று எழுத்து பிழை காணப்பட்டது. அதாவது ஜ-விற்கு பதில் ஐ இருந்தது. இதனை ட்விட்டர் யூஸர் ஒருவர், "ராஐ யா?? ஜ க்கும் ஐ க்கும் டைப் பண்றப்ப எப்டி வித்யாசம் தெரியாம போவும்? English keyboard தான தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணுது? அப்புறம் எப்டி தப்பாவுது? நிறைய பேர் இந்த தப்ப பண்றாங்க"என்று சுட்டி காட்டினார். இன்ஸ்டாவில் இந்த பிழையை சரி செய்து விட்ட பிரியா, ட்விட்டரில் அந்த வசதி இல்லாததால் பிழையை சரி செய்ய முடியவில்லை. இதனை அடுத்து பிழையை சுட்டிக்காட்டிய யூஸருக்கு Thanks for pointing out.. மன்னிக்கவும் **எழுத்துப்பிழை கி.ராஜநாராயணன். I don’t use eng to tamil phonetic keypad. தமிழ் keypad தான். பார்வை கோளாறு நினைக்கிறேன். Check பண்ணிடறேன்"என்று பதில் அளித்துள்ளார்.
Published by:Arun
First published: