இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘A1’. இத்திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் ஜான்சன்.கே இயக்கத்தில் மீண்டும் இணைந்தார் நடிகர் சந்தானம். ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற டைட்டிலுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி, சஷ்டிகா ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு ஆர்தர் கே.வில்சன் ஒளிப்பதிவாளராகவும், பிரகாஷ் பாபு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.
பாரிஸ் ஜெயராஜ் படத்தில் கானா பாடகராக நடித்திருக்கும் சந்தானம், தனக்கே உரிய காமெடி சரவெடிகளையும் அள்ளித் தெளித்துள்ளார். இசை உலகத்தைப் பொறுத்தவரை நான் எப்போதே செத்துவிட்டேன் என்று சொல்லும் சந்தானம் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் இருப்பதாகவும் கிண்டலடித்துள்ளார்.
நேற்று வெளியிடப்பட்ட சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ட்ரெய்லர் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.