புரமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்து கொள்ளவில்லை என்றால் சம்பளத்தில் ஒருபங்கை திருப்பி தர வைப்பதற்கான முயற்சியில் இறங்குவோம் என்று தயாரிப்பாளர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருஞானம் இயக்கத்தில் 24 ஹவர்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில் த்ரிஷா, நந்தா, வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு. வரும் 28-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தை புரமோஷன் செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல திரையரங்கில் இத்திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த்ரிஷா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், இந்த நிலையில் விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தின் புரமோஷனுக்கு வரவில்லை என்றால், பெரிய நடிகர்கள் என்ற எண்ணம் இருப்பதாகவும், ரஜினி, விஜய் போன்றவர்களே வரும் போது, இவர்களுக்கு என்ன பிரச்னை என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சிவா, “பெரிய ஹீரோக்கள் படங்களில் லாபம் வருகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்திருக்கும் போது கதாநாயகி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. இனிவரும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பித்தர வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.