பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் மாரடைப்பால் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் மாரடைப்பால் மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ்

பிரபல சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

  • Share this:
நடிகை சாந்தி வில்லியம்ஸ் 12 வயதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். வியட்நாம் வீடு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பைத் தொடங்கிய சாந்தி வில்லியம்ஸ் மாந்தோப்பு கிளியே, மூடுபனி உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து டும் டும் டும், ஜோடி உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களிலும், தெலுங்கு மலையாளம் திரைப்படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

இவரது கணவர் ஜே.வில்லியம்ஸ். மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்த இவர் 8 படங்களை இயக்கியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஜே.வில்லியம்ஸ் - சாந்தி தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு ஜே.வில்லியம்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு பின்னர் குழந்தைகளை தனி ஆளாக இருந்து வளர்த்து வந்தார் சாந்தி வில்லியம்ஸ்.

திரைப்படங்களைத் தொடர்ந்து சாந்தி வில்லியம்ஸ் நடித்த‘மெட்டி ஒலி’ தொடர் சிறப்பான வரவேற்பைப் பெறவே அடுத்தடுத்து தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வருகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸின் மகன் சந்தோஷ் (34) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். விருகம்பாக்கம் ஐ.ஏ.எஸ் குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்து வந்த சந்தோஷ்(34) நேற்று முன் இரவு தினம் தூங்க சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் அவரது தாயார் சாந்தி அவரை எழுப்பிய போது அவர் எழவில்லை. இதையடுத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சந்தோஷின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது. சந்தோஷ் மாரடைப்பால் உயிரிழந்ததாக விருகம்பாக்கம் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்த சந்தோஷ் திருமணமாகி விவாகரத்து பெற்று தாயுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இளம் வயதில் மகன் மரணமடைந்திருப்பது நடிகை சாந்தி வில்லியம்ஸை பேரதிர்ச்சியிலும், பெரும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: