சித்ரா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி பெற்றோர் மனு

சித்ரா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றக்கோரி பெற்றோர் மனு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றக்கோரி, சித்ராவின் பெற்றோர் முதலமைச்சரின் தனி பிரிவில் தனி அலுவலர் சரவணவேல்ராஜை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

  • Share this:
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமான நடிகை சித்ரா, சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் டிசம்பர் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்திவருகிறார். இதுவரை சித்ராவின் தாய், தந்தை, மாமனார், மாமியார், சித்ராவின் நண்பர்கள் ஆகியோரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் சித்ராவின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது பெற்றோர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர்.

முன்னதாக சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக தங்களிடம் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதாகவும் சித்ராவின் குடும்பத்தார் மற்றும் சின்னத்திரை வட்டாரங்களிலும் விசாரணை நடத்தவேண்டும் எனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹேம்நாத்தின் தந்தை ரவிசந்திரன் புகார் அளித்திருந்தார்.

மேலும் அந்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது, “குடும்பத்துக்காக உழைத்த என்னுடைய கல்யாண செலவிற்கு பணம் இல்லை என்று அம்மா கூறுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றும், அம்மா, அப்பாவின் 60-வது கல்யாணத்தை என் செலவில் சிறப்பாக நடத்தினேன் என்றும், வருத்தத்துடன் என்னிடம் சித்ரா தெரிவித்தது. ஆனால் திருமண செலவு முழுவதும் மணமகன் வீட்டு சார்பாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சித்ராவிடம் நான் சொன்னது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகக் கூறினார்.

இந்த வீட்டில் நான் வந்து வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என்று சித்ரா கூறியது. சரிவிடும்மா பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சமாதானப்படுத்தினேன். அதன் பின் இரண்டு குடும்பங்களும் சந்தோஷமாக திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் தருவாயில் கடந்த 9.12.2020 அன்று அதிகாலை 2.58 மணியளவில் எனக்கு என் மகன் ஹேம்நாத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நான் சித்ராவின் தாயாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட்ய் செய்தியை கூறிவிட்டு ஹோட்டலுக்கு வருகிறேன் என்று கூறியதற்கு அங்கு வர வேண்டாம் என்றும் கேஎம்சி மருத்துவமனைக்குத் தான் வருகிறது என்றார். நானும் எனது மனைவியும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தோம். இரு குடும்பத்தாரும் துக்கத்தினை சகஜமாக பரிமாறிக் கொண்டோம்.

அதன் பின்னர் என் மகனை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பின் சித்ராவின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து காவல்நிலையம் சென்ற சித்ராவின் தாயார் என் மகன் மீது பொய் புகார் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.” இவ்வாறு ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: