கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகம் மக்களிடையே பெரும் வரவேற்றைப் பெற்ற பின் அதன் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் வெளியான டீசருக்கு மில்லியன் வியூஸ் கிடைத்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கன்னட மொழியை முதன்மையாக கொண்ட இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம். ஆனால் இரண்டாம் பாகத்தில் டீசரின் இறுதியில் நடிகர் யாஷ் சிகரெட் பற்ற வைக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் புகையிலை தடுப்புப் பிரிவு படக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அதாவது சிகரெட் புகைப்பதைக் காட்டும் காட்சிகள் சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 5 -ஐ மீறியுள்ளது (வர்த்தக மற்றும் வர்த்தக, விளம்பரம் மற்றும் ஒழுங்குமுறை, உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் தடை) எனவே COTPA 2003 படி ஆன்லைன் தளங்களில் இருந்து டீசரை நீக்கவும், புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் படத்தின் சுவரொட்டிகளை அகற்றவும் புகையிலை தடுப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
“நடிகர் யாஷுக்கு கர்நாடகா மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் திரளான ரசிகர் கூட்டம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள்தான் இவரது ரசிகர்களாக உள்ளனர். இப்படி இருக்கையில் அவர் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை வைத்தால் இளைஞர்களை அவரை பின் தொடரக்கூடும். எனவே ஆன்லைன் தளங்களிலிருந்து அந்த டீசரை நீக்கவும் சுவரொட்டிகளையும் நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று புகையிலை தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கையானது படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் , நடிகர் யாஷ், தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், கர்நாடக திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகியோருக்கு அனுப்பபட்டுள்ளது. இருப்பினும் புகையிலை தடுப்புப் பிரிவானது படக்குழுவிடம் அந்த காட்சிகளை நீக்கும்படி கேட்கவில்லை. ஏனெனில் சட்டப்படி புகைப்பிடிக்கும் காட்சிகளை திரைப்படத்தில் சேர்க்கலாம். அதற்காக ஊக்குவிக்கும் வகையிலான காட்சிகளை நியாப்படுத்துதல் தவறு. அதேபோல் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி வரப்போகிறது எனில் அதற்கு முன்பே புகையிலை எதிர்ப்பு வாக்கியங்கள் திரையிட வேண்டும். படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவெளியிலும் காட்ட வேண்டும்.
புகையிலை எதிர்ப்புக்காக போராடும் வசந்த்குமார் மைசோர்மத் பேசுகையில் “ யாஷ் படத்தின் டீசரில் புகைப்பிடிப்பது ஆரோக்கியமற்ற செயலை ஊக்குவிப்பதாக உள்ளது. இதனால் அவரை பின் தொடரும் இளைஞர்களும் இந்த செயலை பின்பற்ற ஊக்குவிப்பதாக இருக்கிறது. அதோடு யாஷ் பல சமூகத்திற்கான பல உதவிகளை, நல்ல விஷயங்களை செய்கிறார். இப்படி நல்ல மனிதரான அவர் படத்தின் மூலம், தான் ஒரு புகைப்பழக்கம் கொண்டவன் என்பதைப் போல் அடையாளப்படுத்துகிறார். எனவே இதை மாற்றிக்கொண்டால் அவரது இளைஞர் ரசிகர்களுக்கும் நல்லது.
இதேபோல் 2018 ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் முதல் பாகத்திலும் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க கோரி சில மாற்றங்களை செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே பிரச்னையை தலை தூக்கியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.