காலத்தால் அழிக்க முடியாத இசை சகாப்தம் எம்.எஸ்.விஸ்வநாதன்!

எம்.எஸ்.விஸ்வநாதன்

 • Share this:
  இசைச் சக்கரவர்த்தி என தமிழக அரசால் கௌரவிக்கப்பட்ட எம்எஸ் விஸ்வநாதனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது . இந்நாளில் அவர் குறித்து சில சுவாரசியமான தகவல்களை  பார்க்கலாம்.

  நடிகனாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த எம் எஸ் விஸ்வநாதன் அரை நூற்றாண்டிற்கும் மேலாக 700க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மெட்டமைத்து, தமிழக இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி உருபெற்று இன்று காலத்தால் அழிக்க முடியாத சகாப்தமாக நிலைத்து நிற்கிறார்.

  எம்எஸ் விஸ்வநாதனின் சிறு வயது வாழ்க்கை அத்தனை இனிதானதாக அமைந்துவிடவில்லை. நான்கு வயதிலேயே தந்தையை இழந்து ஏறத்தாழ அனாதையாய் திரையரங்குகளில் தின்பண்டம் விற்று, வாழ்க்கையை நகர்த்தி தூரத்திலிருந்து குருநாதர் இல்லாது தாமாக இசை பயின்று நடிகராக வேண்டும் என முயற்சிகள் புரிந்து அதில் தோல்வியடைந்து எம்எஸ் விஸ்வநாதன் விபத்தாக இசையமைப்பாளரான கதை, வாழ்க்கையின் மீது துளியளவும் நம்பிக்கையற்ற மனிதர்களுக்கும் உற்சாமூட்டும் பாடம்.

  காதல், காதல் தோல்வி, சோகம், வலி, வறுமை என எல்லா உணர்வுகளையும் ரசிகர்களுக்கு கடத்துவதில் எம்எஸ் விஸ்வநாதனின் பாடல்களுக்கு தனி பெரும் பங்கு உண்டு. 1950 முதல் 60களின் பிற்பகுதி வரை எம்எஸ் விஸ்வநாதனும் டி ராமமூர்த்தியும் இணைந்து தமிழ் சினிமாவில் வெற்றிப் பாடல்களைத் குவித்தனர். தேவதாஸ் திரைப்படத்தில் வாழ்வே மாயம் பாடலுக்கு இவர்கள் இசை அமைத்து இருந்தாலும் முதன்முதலாக அதிகாரபூர்வமாக இந்த இணை இசையமைத்த திரைப்படம் பணம்.

  ஆரம்பித்த வேகத்திலேயே குலேபகவாலி, ரத்தக்கண்ணீர், பதிபக்தி என இவர்கள் இசையமைத்த பாடல்கள் கேசட், தொலைக்காட்சி உள்ளிட்ட எந்த சாதனங்களும் இல்லாத காலத்திலேயே பட்டி தொட்டி எங்கும் மக்களை ரசிக்க வைத்தது.

  இதையும் படிங்க: படங்களுக்கு தமிழ் பெயர் வைக்க கருணாநிதி செய்த தரமான சம்பவம்!

  எம்எஸ் விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆகியோர் வாழ்க்கையில் 1961ஆம் ஆண்டு மிக முக்கியமான ஒரு வருடம். இந்த வருடத்தில் வெளியான பாலும்-பழமும், பாசமலர், பாவமன்னிப்பு திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தமிழ் இசை வரலாற்றில் இன்றும் அழிக்க முடியாத பாடல்கள் நிலைத்திருக்கின்றன.

  தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்திகளான எம்ஜிஆர் சிவாஜி ஆகியோரின் திரைப்படங்களுக்கு பக்கபலமாக துணை நின்ற எம்எஸ்வியின் இசையை எம்ஜிஆர் தன் திரை வாழ்க்கையின் வெற்றிக்கான ஒரு பகுதி என்றே கருதினார். இதன் காரணமாகவே எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நான் ஆணையிட்டால் பாடல் வெற்றிக்காக எம்எஸ் விஸ்வநாதனை அழைத்து மூட்டையில் பணம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை எம்ஜிஆர் வெளிப்படுத்தியதாக எம்எஸ் விஸ்வநாதனே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.
  எம்ஜிஆர் சிவாஜி காலம் கடந்து ரஜினி, கமல் திரைப்படங்களிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார் விஸ்வநாதன்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இசையமைப்பாளராக பெரும் இசை சாம்ராஜ்யம் நடத்தினாலும் தன்னுடைய குரலாலும் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் விஸ்வநாதன். 200க்கும் அதிகமான திரைப்படங்களில் விசுவநாதன் பாடி உள்ளார். இதில் பிற இசையமைப்பாளர்களின் திரைப்படங்களில் பாடியதும் அடங்கும். கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் புலம்பெயர் தமிழர்களின் வலியை விசுவநாதன் குரலில் பதிவு செய்ததை இன்றளவும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாது.

  தில்லுமுல்லு திரைப்படத்தை ரீமேக் செய்த போது யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து, அதில் பாடி சமகால இசைப் பிரியர்களின் நாடித்துடிப்பையும் அறிந்தவன் தான் என்பதை எம் எஸ் விஸ்வநாதன் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார்.

  எம்எஸ் விஸ்வநாதனின் கலைச்சேவையை பாராட்டி, இசைச் சக்கரவர்த்தி என்ற விருதை வழங்கி 60 பொற்காசுகளையும் கொடுத்து தமிழக அரசு சார்பில் கவுரவித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இதைத் தாண்டி700க்கு அதிகமான படங்களில், தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் இசை அமைத்து இருந்தாலும் எம்எஸ் விஸ்வநாதனுக்கு நாட்டின் உயிரிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவரது ரசிகர்கள் மனதில் இன்றளவும் உள்ளது. திரைப்படத்திற்கான உயரிய விருதான தேசிய விருதையோ, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட இந்திய அரசின் உயரிய விருதுகளையோ பெற்றிறாத எம்எஸ் விஸ்வநாதன் விருதுகளை கடந்து நினைவுகளாக தமிழ் மக்கள் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

   
  Published by:Murugesh M
  First published: