ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'ரன் பேபி ரன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரில்லர் வைகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கத்தில் 'ரன் பேபி ரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. ஆனால் இந்த முறை திரில்லர் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். இதில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா, இயக்குனர் தமிழ் உள்ளிடவர்கள் நடித்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரியில் ஒரு இளம் பெண் மாடியில் இருந்து விழுந்து இறந்து விடுகிறார். அந்த மரணத்திற்குப் பிறகு நடைபெறும் சம்பவங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், அந்த சம்பவத்தில் எங்கோ உள்ள ஒரு இளைஞன் எப்படி மாட்டிக் கொள்கிறான்? அதிலிருந்து அவன் தப்பிக்கிறானா? இல்லையா? என்பதே 'ரன் பேபி ரன்' திரைப்படத்தின் கதை.
ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய வழக்கமான பார்முலாவில் இருந்து விலகி கதையை தேர்வு செய்துள்ளார். வங்கி மேலாளரான ஆர்.ஜே.பாலாஜி காரில் அவருக்கு தெரியாமலேயே ஐஸ்வர்ய ராஜேஷ் ஏறிவிடுகிறார். பிரச்னையில் இருக்கும் அவருக்கு பாலாஜி உதவி செய்கிறார். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்துவிடுகிறார். அதற்கு பிறகு பாலாஜியை மர்மமும், பிரச்னையும் சூழ்கிறது. அதில் இருந்து தப்பிக்க அவர் செய்யும் முயற்சி ஆங்காங்கே சுவாராஸ்யப்படுத்துகிறது.
முதல் பாதியில் ஒரு மர்ம மரணம், அதை தொடர்ந்து நடைபெறும் விஷயங்கள் என திரைக்கதை நகர்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட காட்சிகள் சற்று நீளமாக செல்லும் உணர்வை கொடுக்கின்றன. மேலும் இவ்வளவு எளிதாக அந்த விஷயத்தை கையாள முடியுமா என்று தோன்ற வைக்கிறது. மேலும் கார் ஓட்டுநர் தன் வாகனத்தில் இருக்கும் உடல் பற்றி ஏன் காவல் துறைக்கு தெரியப்படுத்தாமல் எரிக்கிறார் என்ற காட்சியில் தெளிவு இல்லை.
இரண்டாம் பாதியில் கொலை எதற்காக நடந்தது? அதில் ஈடுபட்டவர்களை பாலாஜி எப்படி கண்டுபிடிக்கிறார்? கொலை ஏன் நடந்தது? என்ற விஷயங்கள் இடம்பெறுகின்றன. இதனால் முதல்பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதி சற்று சுவாரஸ்யப்படுத்துகிறது. இருந்தாலும் சில இடங்களில் சோர்வு ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை.
செய்திகளில் நாம் பார்த்த ஒரு விஷயத்தை கதையாக வைத்துகொண்டு இந்த இரண்டு மணி நேர படத்தை எடுத்துள்ளனர்.
இதில் ஆர்.ஜே.பாலாஜி கதைக்கு ஏற்றவாறு கச்சிதமாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களுக்கான காட்சிகள் குறைவாகவே உள்ளன. இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியை சரியாகவே செய்துள்ளனர்.
ரன் பேபி ரன் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இவரின் பின்னணி இசை பல படங்களுக்கு வலு சேர்த்திருக்கிறது. அதேபோல் இந்தப் படத்திற்கும் திரில்லரான இசையை கொடுக்க முயற்சித்துள்ளார். ஆனால் இந்தப் படத்திற்கு தன்னுடைய அடையாளத்துடன் இன்னும் சிறப்பான இசையை அவர் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
அதேபோல் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளை இன்னும் பதட்டம் இருக்கும் வகையில் வடிவமைத்திருக்கலாம். இதில் நாங்கள் ஒரு டிவிஸ்டை யோசித்துள்ளோம், அதற்காக இந்த காட்சிகள் வருகின்றன என்ற வகையிலேயே இருக்கின்றன. அப்படியல்லாமல் உண்மையிலேயே விறு விறுப்பு இருக்கும் வகையில் திரைக்கதையை கொண்டு சென்றிருந்தால் நிச்சயம் பாராட்டும் வகையில் 'ரன் பேபி ரன்' இருந்திருக்கும். இருந்தாலும் இந்தப் படத்தின் நீளம் 2 மணி நேரம் 10 நிமிடம்தான் என்பது சற்று ஆறுதல்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.