எம்ஜிஆரை வில்லனாகச் சித்தரிக்கிறதா குயின்... #QueenReview

எம்ஜிஆரை வில்லனாகச் சித்தரிக்கிறதா குயின்... #QueenReview
  • Share this:
குயின் வெப் சீரிஸ். டிசம்பர் 14 ம் தேதி வெளியான இந்த தொடர் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே எதிர்பார்ப்பில் பல லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருக்கிறது இந்த வலைத் தொடர். ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை கிடையாது என இந்த வலைக்குழுவினர் மீண்டும் மீண்டும் கூறுகின்றனர்.  ஆனால், ஜெயலலிதாவின் வாழ்க்கையைத்தான் சொல்கிறோம் என்பதை படத்தின் புரோமோ காட்சிகளில் தொடங்கி , பாத்திர படைப்புகள் வரை வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

சினிமா, அரசியல் என இரண்டு துறையிலும் உச்சம் தொட்ட  பெண் ஆளுமை ஜெயலலிதா. அவரைப் பற்றி, திரைப்படம் மூலமாகவோ, வலைத் தொடர்  வாயிலாகவோ, அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டியது படைப்பாளியின் கடமைதான். இது போன்ற  முயற்சிகள் வரலாற்றின் தேவையாகவும் இருக்கிறது.

தற்போது இந்த பதினொரு மணி நேர குயின் வலைத் தொடர்  எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? என்ன சொல்ல வருகிறது? எத்தகைய தாக்கத்தை இந்த வலைத் தொடர் ஏற்படுத்தும்? என்பதை பார்ப்போம்.


ஜெயலலிதா சிறுமியாக இருந்ததிலிருந்தே , அவர் ஆசைப்பட்ட எதுவும் அவருக்கு கிட்டியதே இல்லை என்பதாக வலைத் தொடர் தொடங்குகிறது. அவரது தாய் துணை நடிகை என்பதால், வருமானம் இல்லை. வருமானமில்லாத காரணத்தினால், திரைத்துறைக்குள் தள்ளப்படுகிறார் ஜெயலலிதா. இதுதான் வலைத் தொடரில் ஜெயலலிதா குடும்பம் குறித்த சித்தரிப்பு.

ஆனால், உண்மையில் ஜெயலலிதாவின் குடும்பம் , அன்றாடக் காய்ச்சியாக இருக்கவில்லை என்பதே உண்மை. ஜெயலலிதாவின் தாத்தா மைசூர்  அரண்மனையில் திவானாக இருந்தவர்.ஜெயலலிதாவின் சித்தி விமானப் பணிப்பெண்ணாக இருந்தவர். சிறுமி ஜெயலலிதா மீது அனுதாபம் வரவேண்டும் என்பதற்காக ஜெயலலிதா குடும்பமே வறுமையில் தோய்ந்த குடும்பம் என்று காண்பிக்கப்பட்டிருக்கிறது. எதற்காக இப்படி செயற்கையாக காட்ட வேண்டும்? என்று தெரியவில்லை.

தன்னுடைய முதல் தமிழ் படமான வெண்ணிற ஆடை படத்தில் நல்ல நடிப்புத் திறனையும், நடன அசைவுகளையும் வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்  ஜெயலலிதா. ஆனால், இந்த வலைத் தொடரில், ஆடவேத் தெரியாமல், ஒரு நாள் முழுவதும் ஜெயலலிதா பாடாய் படுத்துவார்.உண்மையில் ஜெயலலிதா யார் தெரியுமா?

13 வயதில் அரங்கேற்றம் நடத்தி நடிகர் சிவாஜி கணேசனால் வாழ்த்துப் பெற்றவர். வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கும்பொழுது, அவருக்கு 16 வயது. சிறுவயதிலேயே அரங்கேற்றம் நிகழ்த்தி காட்டிய அபாரமான நடனத் தாரகை ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவை ஆடவேத் தெரியாத ஒருவர் போலவும், இயக்குநர் அவரை நடிக்க வைக்க படாதபாடு பட்டது போலவும் காண்பிப்பது சரியா ? ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இந்த காட்சியை கற்பனையாகக் கூட வைத்திருப்பார்களா,  ?

ஜெயலலிதா எம்ஜிஆருடன் நடித்த  முதல் படம் “ஆயிரத்தில் ஒருவன் “. அந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் , எம்ஜிஆர் மிகப் பெரிய நடிகர். திமுகவின் முதன்மையான பிரச்சாரப் பீரங்கி. அப்பேற்பட்ட எம்ஜிஆர், சிறுமி ஜெயலலிதாவின் சிறிய வீட்டிற்கு வந்து, தன் படத்தில் நடிப்பியா? என்று கேட்கிறார். புனைவுக் கதை ,கற்பனைக் கதை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும், உண்மைக்கு நேர் எதிரான காட்சிகள் வைக்கலாமா?, இது எம்ஜிஆரின் ஆளுமையை சிறுமைப்படுத்துவது போலாகாதா,?

“ஆயிரத்தில் ஒருவன் “படத்தின் இயக்குநர் பந்துலு. அவர் மிகப்பெரிய இயக்குநர். படத்தின் நாயகன் எம்ஜிஆர். , சிறுமியான ஜெயலலிதா இந்த இரண்டு ஆளுமைகளுக்கும் அறிவுரை வழங்குவது போல் ஒரு காட்சி வருகிறது.

“ஆயிரத்தில் ஒருவன்“ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியமைத்தது ஜெயலலிதாதான் என்று இந்த படம் சொல்கிறது. கற்பனைக்காக கூட  இது போன்று உண்மைக்கு மாறான வரலாற்றை  சொல்லலாமா?

“ ஆயிரத்தில் ஒருவன் “கிளைமாக்ஸ் மக்களாட்சி தத்துவத்தை உரக்கச் சொன்ன காட்சி. மக்கள் மனதில் எம்ஜிஆருக்கு இருக்கும் சிம்மாசனத்திற்கு மகுடம் சேர்த்த காட்சி. அந்த காட்சிக்கு சொந்தக்காரர் பந்துலுவோ, எம்ஜிஆரோ கிடையாது. 15 வயதான சிறுமி ஜெயலலிதாதான் என்று இந்த வலைத் தொடர் சொல்கிறது. ஏற்கனவே அரசியலற்றவர்களாக இருக்கும் இந்த தலைமுறைக்கு இது தவறான புரிதலை ஏற்படுத்தும் அல்லவா ? ஜெயலலிதா அறிவுக்கூர்மையானவர் என்பதை காட்டுவதற்காக, மற்றவர்களின் ஆளுமையைக் குறைப்பது போல் அல்லவா  இருக்கிறது !

எம்ஜிஆர் ஜெயலலிதா கூட்டணியில் படங்கள் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. மக்கள் மத்தியில் ஜெயலலிதாவிற்கும் செல்வாக்கும் கூடியது. இது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், ஜெயலலிதாவை எம்ஜிஆர் கண்காணிப்பில் வைத்திருந்தார். தன்னைத் தவிர வேறு  எந்த நடிகருடன் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து வைத்திருந்தார்  என்று இந்த வலைத் தொடர் சித்தரிக்கிறது. ஜெயலலிதா வீட்டிற்குள் எப்போது வேண்டுமானாலும், புகுந்து வேவு பார்க்கும் அளவிற்கு எம்ஜிஆர் நடந்துக் கொண்டார் . இதனால் ஜெயலலிதா ஒரு போதும் நிம்மதியாக இருந்ததில்லை.

சிறுமியாக இருக்கும்பொழுது, வறுமையின் காரணமாக படிப்பை இழந்தார். இளமைப் பருவத்தில், எம்ஜிஆரின் நடவடிக்கையால், தனது  சுதந்திரத்தை இழந்தார்.  இப்படித்தான் குயின் வலைத்தொடர்   சொல்கிறது.

ஆனால், உண்மையான வரலாறு என்ன தெரியுமா.?

எம்ஜிஆர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஒப்பந்தம் போடுவது உண்மை. ஆனால், ஜெயலலிதா விவகாரத்தில் எம்ஜிஆர் அவ்வளவு இறுக்கமாக நடந்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆருடன்   தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும்பொழுதே, சிவாஜியுடன் பல படங்களில்  ஜெயலலிதா நடித்தார்.

ஒரு எம்ஜிஆர் படம், ஜெய்சங்கர் படம், அடுத்து சிவாஜி அல்லது ரவிச்சந்திரன்  என மாறி மாறி எல்லா நடிகர்களுடனும் ஜெயலலிதா நடித்து வந்தார்.  குயின் வலைத் தொடரில் குறிப்பிட்டிருந்தது போல், தொடர்ந்து  எம்ஜிஆர் படங்களில் மட்டுமே  நடிக்கவில்லை. அதிகமான படங்கள் எம்ஜிஆருடன் நடித்தார் என்பது மட்டுமே உண்மை. எம்ஜிஆரின் ஜோடி என பேசப்பட்ட காலத்திலேயே,  சுமதி என் சுந்தரி, எங்க மாமா, கலாட்டா கல்யாணம் , சவாலே சமாளி, என சிவாஜியுன் வெற்றிப் படங்களைத் தந்தவர் ஜெயலலிதா.

மஞ்சுளா வருகைக்குப் பின்  ஜெயலலிதாவுடன் நடிப்பதை எம்ஜிஆர் கொஞ்சம் குறைத்துக் கொண்டார். அதை குறிப்பாக ஒரு காட்சியில் காண்பித்திருக்கிறார்கள். அது உண்மை . ரிக்ஷாக்காரன் பட போஸ்டரை கையில் வைத்துக் கொண்டு, மஞ்சுளாவைப் பற்றி  ஜெயலலிதா விசாரிக்கும் காட்சி மிக பொருத்தமாக இருந்தது.

65 ம் ஆண்டிலிருந்து 71ம் ஆண்டு  வரை தொடர்ந்தும்,  சற்று இடைவெளி விட்டு 73 ம் ஆண்டு வரையும்  எம்ஜிஆருடன் நடித்தார் ஜெயலலிதா. ஆனால், இந்த காலகட்டங்களிலெல்லாம், எம்ஜிஆர் தன்னை  சந்தேகித்தார், வேவு பார்த்தார், அவரது கட்டுப்பாட்டில் இருந்தேன் என்று  ஜெயலலிதா புலம்புவது போல் இந்த வலைத் தொடர் சொல்கிறது. இது உண்மையா ? என்பதை எம்ஜிஆர் ஜெயலலிதா  ரசிகர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

சினிமாவிலிருந்தே ஒதுங்கி, எழுத்தாளராக பரிணமித்த ஜெயலலிதாவை எம்ஜிஆரே வீடு தேடி வந்து பார்க்கிறார். அப்போது ஜெயலலிதா அலட்சியமாக நடந்துக் கொண்டார். எம்ஜிஆர் சிரித்துக் கொண்டே பேசினார் என்று ஒரு காட்சி இருக்கிறது. அப்போது எம்ஜிஆர் முதலமைச்சர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கற்பனைக்காக கூட இப்படியொரு காட்சி நடைபெற்றிருக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. ஏன் இப்படி பதிவு செய்கிறார்கள் என்றும் புரியவில்லை?

உலகத் தமிழ் மாநாட்டில்,  ஜெயலலிதாவின் நாட்டிய நாடகத்திற்கு ஏற்பாடு செய்கிறார் ஆர்.எம்.வீரப்பன். அதற்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கட்சியில் சேர்கிறார் ஜெயலலிதா. இது வரலாறு.

இந்த வலைத் தொடரில் உலகத் தமிழ்மாநாட்டில் நடனமாடுவதை ஏளனமான விசயமாக ஜெயலலிதா நினைப்பது போல் ஒரு காட்சி வருகிறது.  எம்ஜிஆர் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டில் அவ்வளவு சலிப்புடன் ஜெயலலிதா கலந்துக் கொண்டாரா,?  ஜெயலலிதாவின் வரலாற்றில் அதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா ,? இப்படி காட்சிகள் அமைப்பது ,எம்ஜிஆரையும், அவர் நடத்திய உலகத் தமிழ் மாநாட்டையும் இழிவுப் படுத்தும் செயல் அல்லவா,? ஏன் இப்படிபட்ட காட்சிகள் வைக்கப்பட்டன .

கட்சியில் சேர விருப்பமே இல்லாத ஜெயலலிதாவை எம்ஜிஆர் நம்பிக்கை கொடுத்து சேர்க்கிறார். ஜெயலலிதாவால் கட்சி வளர்கிறது. அதிமுக மூத்த தலைவர்கள் ஜெயலலிதாவை விலக்கி வைக்க நினைக்கிறார்கள். ஆனால், எம்ஜிஆர் ஜெயலலிதாவை நம்புகிறார். திடீரென்று எம்ஜிஆரின் மரணத்தை காண்பிக்கிறார்கள். அதற்குப் பிறகு ஜானகி ஆதரவாளர்களால் அவமானப்படுத்தப்படுகிறார். சசிகலா தரும் நம்பிக்கையிலும், ஆதரவிலும் ஜெயலலிதா அரசியலில் புது அவதாரம் எடுக்கிறார். இத்துடன் இந்த வலைத் தொடர் முடிகிறது.

எம்ஜிஆர், வரலாற்றை தெரிந்தவர்களுக்கும், சராசரி ஜெயலலிதா தொண்டர்களுக்கும் இந்த வலைத் தொடரை பொறுமையாக பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை.

பொருத்தமே இல்லாமல் பேசப்படும் தூய தமிழும்,  இந்தி சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் மொழிபெயர்ப்பும்  அந்நியத்தன்மையை ஏற்படுத்துகிறது. கௌதம்மேனன் தன்னுடைய காதல் படங்களை  எடுப்பது போன்ற காட்சி அமைப்பையும், வசனங்களையும் குயின் சீரியலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் இந்த பாணி, படத்தின் வீரியத்தையும், அரசியல் நெடியையும் முழுமையாகக் குறைத்துவிடுகிறது.

வரலாற்று ஆவணத்தை தழுவி எடுப்பவர்கள் அடிப்படையான அம்சங்களை மாற்றக்கூடாது. 62 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயங்கியதாக காண்பிக்கப்படுகிறது. இது அடிப்படையில் தவறு. தமிழ்நாட்டைப் பற்றி அடிப்படை வரலாறு தெரிந்தவர்கள்  படக்குழுவில் யாருமே இல்லையா?  என்ற கேள்வி எழுகிறது.

ஜெயலலிதா போன்ற வெகுஜன  ஈர்ப்புக் கொண்ட தலைவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கும்பொழுது, கூடுதல் கவனம் இருக்க வேண்டும். ஜெயலலிதா என்ற ஆளுமையை, எப்போதும் யாருடைய துணையையாவது  எதிர்பார்த்து நிற்கும், அனுதாபத்தை வேண்டி நிற்கும் சராசரியான பெண்ணைப் போல காட்டியிருப்பது சரியா? ஜெயலலிதாவின் வாழ்க்கையில் ஏக்கங்களும், துக்கங்களும்  இருந்திருக்கலாம். ஆனால், அந்த கூறுகளை மட்டுமே ஜெயலலிதாவின் அடையாளமாக காட்டுவது சரியாகாது.

கற்பனைக் கதையாக எடுத்திருக்கிறோம் என்று சொன்னால், அது மிகப்பெரும் தவறு. கற்பனையாக கூட ஜெயலலிதாவின் ஆளுமையை நீங்கள் சிறுமைப்படுத்தலாமா? இந்த சீரியலை பார்க்கும் இளம் தலைமுறை, எம்ஜிஆரை கதாநாயகனாகப் பார்க்கமாட்டார்கள்.  ஜெயலலிதாவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த வில்லனாகத்தான்  புரிந்துக் கொள்வார்கள்.
First published: December 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்