முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் வெற்றியடைந்ததா மிர்ச்சி சிவாவின் காமெடி? விமர்சனம் இதோ!

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் வெற்றியடைந்ததா மிர்ச்சி சிவாவின் காமெடி? விமர்சனம் இதோ!

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்

Single Shankarum Smartphone Simranum Review: மிர்ச்சி சிவா நடித்துள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் மிர்ச்சி சிவாவுடன் பாடகர் மனோ, நடிகர்கள் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், திவ்யா கணேஷ், ஷாரா, மா.க.ப ஆனந்த், சின்னத்திரை வெட்டுக்கிளி பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மொரட்டு சிங்கிளாக இருக்கும் ஆண்களுடன் பேசும் வகையில் பெண்களின் உணர்வுகளுடன் கூடிய ஒரு போனை உருவாக்குகிறார் ஷாரா. ஆனால் அந்த போன் சிங்கிள் சங்கரான மிர்ச்சி சிவாவின் கையில் கிடைக்கிறது. அதற்கு பிறகு நடக்கும் ஜாலியான சம்பவங்களே சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்.

இந்தப்படத்தின் முதல்பாதி, உணவு டெலிவரி செய்யும் சிவாவை சுற்றியே கதை நகர்கிறது. அதுவும் சிம்ரன் அவர் கைக்கு வந்தபின் வாழ்க்கையில் நிறைய மேஜிக் நடைபெறுகிறது. குறிப்பாக, Mustang காரில் சென்று உணவு வழங்குகிறார், ட்ரோன் மூலம் அனுப்புகிறார். ஏராளமான பணம் கிடைக்கிறது. இவை அனைத்திற்கும் ஸ்மார்ட்போன் சிம்ரன் உதவி செய்கிறது. ஒரு கட்டத்தில் சிம்ரன், சிவாவை காதலிக்க தொடங்குகிறது. ஆனால் சிவா, இன்ஸ்டாகிராம் பிரபலமான அஞ்சு குரியனை காதலிக்கிறார். அதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் இரண்டாம்பாதி.

இதில் இடம்பெறும் பாடகர் மனோவின் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சிங்கார வேலன் படத்திற்கு பிறகு அவர் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிர்ச்சி சிவாவின் வசனங்கள் அவருடைய ஸ்டைலில் அமைந்துள்ளன. அவர் பேசும் வசனங்ககுக்கு திரையரங்கில் சிரிப்பு சத்தம் கேட்கின்றன.

பெண் எண்ணங்களுடன் கூடிய  சாப்ட்வேரால் உருவான போன் என்பதால் ஒரு இடத்தில் கூட லாஜிக் என்பதை எதிர்பார்க்க முடியாது. முழுக்க முழுக்க ஜாலியாக எடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே இயக்குனர் கவனம் செலுத்தியுள்ளார். அது ஆகா ஓகோ என்று இல்லை என்றாலும், பாஸ்மார்க் வாங்கும் அளவுக்கு காட்சிகள் உருவக்கப்பட்டுள்ளன.

இதில் காமெடி காட்சிகள் அவ்வபோது வந்தாலும், சில போரான காட்சிகளும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அதேபோல் குழந்தைகளை கவர வேண்டும் என்பதற்காக கிளைமேக்ஸ் காட்சிகளில் மார்வெல் கதாபாத்திரங்களை கொண்டு வந்துள்ளனர். அது நமக்கு நீண்ட நேரம் செல்கிறதோ என்று தோன்ற வைக்கிறது. ஆனால் சிலருக்கு அது பிடித்தாலும் பிடிக்கலாம்.

சிங்கிள் சங்கரும் ஸ்மாட்போன் சிம்ரனும் படம் பார்க்கும்போது சிரிக்கலாம், ஆனால் திரையரங்கைவிட்டு வெளியே வந்தபிறகு காட்சிகள் நினைவில் இருக்காது. மேலும் இந்த சமூகத்தில் உணவு டெலிவரி செய்பவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் நகைச்சுவையோடு சில காட்சிகளில் கூறியுள்ளார் இயக்குனர்.

மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, மேகா ஆகாஷ், திவ்யா கணேஷ் உள்ளிட்ட அனைவரும் காட்சிக்கு என்ன தேவையோ அதற்கான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோல் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் கச்சிதமாக அமைந்துள்ளன.

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் மிர்ச்சி சிவா பட வகையில் மற்றுமொரு படம். தமிழ்ப்படம் உள்ளிட்ட அவரின் வெற்றி படங்கள் பிடித்தவர்களுக்கு இந்தப் படமும் பிடிக்கும். இது ஒரு லாஜிக் இல்லாத மேஜிக் வகையிலான படமாகவே அமைந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Movie review