Home /News /entertainment /

மாறன் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

மாறன் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்

மாறன்

மாறன்

Maaran Review: துருவங்கள் பதினாறு, மாஃபியா - சேப்டர் 1 படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் மாறனை இயக்கியிருந்தார்.

  • News18
  • Last Updated :
தனுஷ் நடித்திருக்கும் மாறன் நேற்று மாலை 5 மணிக்கு டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியானது. துருவங்கள் பதினாறு, மாஃபியா - சேப்டர் 1 படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் மாறனை இயக்கியிருந்தார். முந்தைய இரு படங்களைப் போல இதையும் த்ரில்லர் ஜானரில் இயக்கியவர், கூடுதலாக தங்கச்சி சென்டிமெண்டையும் மாறனில் சேர்த்துள்ளார்.

நேர்மையான இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்டான மதிமாறன் (தனுஷ்), தன்னுடன் பணிபுரியும் தாராவுடன் (மாளவிகா மோகனன்) சேர்ந்து முன்னாள் அமைச்சர் பழனியின் (சமுத்திரகனி) இவிஎம் ஸ்கேமை கண்டுபிடிக்கிறார். மாறனிடம் இருக்கும் ஆதாரங்களை வாங்க பழனி பல வழிகளில் முயல்கிறார். இந்த மோதலில் மாறன் பெரும் இழப்பை சந்திக்கிறார். இவர்கள் மோதலின் முடிவு என்ன என்பதை மாறன் சொல்கிறது.

சில மாதங்களுக்கு முன் என்று டைட்டில் போட்டு மெயின் கதையை ஆரம்பிக்கிறார்கள். இந்த சில மாதங்களில் தனுஷ் பத்திரிகை ஒன்றில் சேர்ந்து, பல மோசடிகளை கண்டுபிடித்து, பத்திரிகைகளின் அட்டைப் படத்தில் இடம்பிடித்து, இளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகனாக உயருகிறார். சமுத்திரகனி பேசுவதை ஒட்டு கேட்பதைத் தவிர அவர் என்ன இன்ஸ்டிகேடிவ் ஜர்னலிசம் செய்தார் என்று கடைசிவரை சொல்லவில்லை. அவருடன் பணிபுரியும் மாளவிகா மோகனன் மாடு அசை போடுவது போல் சதா நேரம் பபிள்கம் மென்று கொண்டிருக்கிறார். வேலை? அதை கடைசிவரை காட்டுவதில்லை.

முன்னாள் அமைச்சர் சமுத்திரகனியை ஸ்லோமோஷனில் பில்டப்புடன் அறிமுகப்படுத்துகிறார்கள். தனது மோசடியை அம்பலப்படுத்திய மாறனை பகை தீர்க்க நாலு அடியாள்களை அனுப்புகிறவர், இவிஎம் மெஷினை தவறவிட்ட தனது ஆளை (அமீர்) கொல்ல துப்பாக்கியுடன் அவரே நேரடியாக செல்கிறார். புலிக்கு தடியும், கொசுவுக்கு பீரங்கியும் கொண்டு போனதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது இவரது கதாபாத்திரம்.

ஐசியுவில் அனுமதிக்க வேண்டிய பலவீனத்துடன் இருக்கிறது திரைக்கதை. ஸ்பூன் பீடிங்கைவிட மோசமான முறையில் திரைக்கதையை கையாண்டிருக்கிறார் கார்த்திக் நரேன். மாறனின் தந்தை சத்யமூர்த்தியின் (ராம்கி) கதையை சொல்லும் ஆரம்ப காட்சியிலேயே திரைக்கதையின் தரம் தெரிந்துவிடுகிறது. கர்ப்பமாக இருக்கும் சத்யமூர்த்தியின் மனைவிக்கு எப்போது வேண்டுமானாலும் வலி வரலாம் என தாய்மாமன் நரேன் சொல்லிச் செல்கிறார். சொன்னபடி வலி வருகிறது. நேர்மையா மட்டுமில்ல சாமர்த்தியமாகவும் இருக்கணும் என மகனுக்கு சத்யமூர்த்தி அறிவுரை சொல்கிறார். சரிதான், இன்றோடு சத்யமூர்த்தி கதை முடிந்தது என்று நாம் நினைப்பது போலவே எதிரிகள் அவரை கொன்று போடுகிறார்கள். தங்கச்சி பார்த்து போய்ட்டு வாம்மா என்று சொல்லும் போதே அடுத்த கண்டம் தங்கச்சிக்குதான் என்பது தெரிந்துவிடுகிறது. தங்கையின் (ஸ்மிருதி வெங்கட்) உடைந்த கையில் மெட்டல் வச்சிருக்கு என்று டாக்டர் ஒன்றுக்கு இரண்டுமுறை சொல்லும் போதே இதுதான் படத்தின் ட்விஸ்ட் என்பது தெரிந்து போகிறது.

இந்த கிண்டர்கார்டன் திரைக்கதையைவிட பலவீனமாக நாற்பதாண்டு பழமையுடன் இருக்கின்றன வசனங்கள். கதை, காட்சியில் இருக்கும் செயற்கைத்தனத்தை கலை இயக்கம் ஈடுசெய்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஹைடெக் காபி ஷாப் போல் இருக்கிறது செய்தி அலுவலகமாக காண்பிக்கும் இடமும், அங்கு இருப்பவர்களின் நடவடிக்கையும். ஜுனியரை குற்றம் சொல்லும் கோமாளி சீனியர் வேடத்தை இளவரசுக்கு தந்து வீணடித்திருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஜெயபிரகாஷ், நரேன், போஸ் வெங்கட் என்று பலரும் இருக்கிறார்கள். போலீசாக வரும் மகேந்திரன் தாடியுடன் இருக்கிறார். அட்லீஸ்ட் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார் என்றாவது காட்டியிருக்கலாம்.

பொறுமையை சோதிக்கும் கதையில் ஒன்றே கால் மணி நேரம் கடந்த பிறகு சுவாரஸியமான திருப்பம் ஒன்று வருகிறது. ஆனால், அதுவும் அடுத்தடுத்தக் காட்சிகளில் சுவைகுன்றி சலிப்பாக மாறுகிறது. ஸ்மிருதி வெங்கட் தவிர மற்றவர்களின் நடிப்பைப் பற்றி குறிப்பிட எதுவுமில்லை. பிறவற்றுடன் ஒப்பிடுகையில் ஜீவி பிரகாஷின் மூன்று பாடல்களும் பரவாயில்லை. பழம்பஞ்சாங்கமான காட்சிக்கு அவரது மாடர்னான இசை பொருந்தாமல் இரட்டைக்குழல் துப்பாக்கியாக நம்மை தாக்குகிறது. எடிட்டர் என்று பெயர் வருகிறது. ஆனால், படத்தில் அவர் வேலை செய்ததற்கான தடயமேயில்லை. கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், இவிஎம் மோசடி என்று கிரிமினல் வேலைகளை செய்யும் அமீர், 'உண்மையை சொல்றோம்னு நீங்க போடுற செய்தியினால பாதிக்கப்படுறவங்களைப் பத்தி யோசிச்சிருக்கீங்களா?' என்று கேட்கையில் கொஞ்சம் மிரண்டுதான் போகிறோம். உண்மை செய்தியால் கிரிமினல் பாதிக்கப்படுகிறான், இதற்கு உண்மை செய்தியை போட்டவன் கலங்கி நிற்கிறான். என்ன மாதிரியான அறத்தை சொல்ல வருகிறார் கார்த்திக் நரேன்?

கதை, காட்சி, கதாபாத்திர தன்மை என்று அனைத்திலும் இந்த புரிதலின்மை தீர்க்கமற நிறைந்திருக்கிறது. இதையெல்லாம் சரி செய்ய ஹாலிவுட்டில் ஸ்கிரிப்ட் டாக்டர் என்று ஒருவர் (அல்லது ஒரு டீம்) இருக்கும். மாறன் ஸ்கிரிப்டை அதேபோல் நல்ல டாக்டராகாப் பார்த்து சில மாதங்கள் சிகிச்சைக்கு விட்டிருந்தால் படம் பார்க்கிறவர்கள் இந்தளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

மாறன் - அமெச்சசூர் த்ரில்லர் ட்ராமா.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush, Malavika Mohanan

அடுத்த செய்தி