முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Viruman movie review: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கிறது?

Viruman movie review: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கிறது?

விருமன் படத்தில் கார்த்தி.

விருமன் படத்தில் கார்த்தி.

அப்பாவை திருத்த நினைக்கும் மகனுக்கும், மகனை பழிவாங்க துடிக்கும் அப்பாவுக்கு இடையே நடக்கும் கதை தான் விருமன். 

  • Last Updated :

கார்த்தி நடிப்பில் உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் விருமன் படம் உருவாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி - முத்தையா கூட்டணியில் விருமன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பணம், கெளரவம், சுயநலம் என தவறு செய்துகொண்டிருக்கும் தாசில்தார் அப்பாவுக்கும், அவரை திருத்த நினைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் விருமன். அவர் திருந்தினாரா? அவரால் ஏற்படும் இழப்பு என்ன? விட்டுகொடுத்தது யார் என்பது படத்தின் மீதி கதை.

பிரகாஷ்ராஜூக்கு நான்கு மகன்கள். நான்காவது மகன் விருமன், அம்மா மீது அதீத அன்பு கொண்டிருக்கிறார். ஆனால் அப்பா செய்த தவறால் அம்மா தற்கொலை செய்துகொள்கிறார். அதற்கு காரணமான அப்பாவை கொல்ல விருமன் துரத்துகிறார். அங்கு தொடங்குகிறது படம். இந்த கதையை கிராமத்து பின்னணியில் உறவுகளின் முக்கியத்துவத்துடன் திரைக்கதை அமைத்து ரசிக்கும்படி படமாக்கியுள்ளார் முத்தையா.

பந்தல் போடும் வேலை செய்யும் விருமன், தந்தையை எதிர்த்து நிற்கும் காட்சிகள் சுவாரஸ்யம். அத்துடன் அந்த காட்சிகளில் நடிகர் சூரி பேசும் வசனங்கள் சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன.

இது அப்பா மகன் இருவருக்குள் நடக்கும் சண்டை படமாக இருந்தாலும், அதில் அண்ணன் தம்பி, தாய் மாமன், கொழுந்தனார் பாசம் என அனைத்து உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை உருவாக்கியுள்ளனர். உறவுகளின் முக்கியத்துவம் மறந்துகொண்டிருக்கும் சூழலில், விருமன் போன்று அவ்வபோது சில படங்கள் வெளியாகின்றன. உறவுகளின் முக்கிதத்துவத்தை கூறும் அதே வேலையில் பெண்கள் மீதான மரியாதையையும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பதியவைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் வரும் வடிவுக்கரசி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் ஆதிக்க காட்சிகள் இன்னும் சில குடும்பங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களுடன் பொருந்துகின்றனர். அதில் எதற்கும் பயப்படாதவராகவும், அப்பாவை நக்கலுடன் எதிர்கொள்ளும் காட்சிகளிலும் கார்த்தி பிரமாதப்படுத்துகிறார். அதேபோல் அதிதி ஷங்கருக்கு இது முதல் படம் என்ற பயமே இல்லாமல் நடித்துள்ளார். நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி அசத்தியுள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் இடம்பெறும் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு அசத்தலான நடனமாடி செம என சொல்ல வைக்கிறார். இவர்களை தவிர, ராஜ்கிரண் மற்றும் கருணாஸ் தாய் மாமன்கள் கதாபாத்திரத்தில் வழக்கம் போல் ஸ்கோர் செய்துள்ளனர்.

விருமன் படத்தில் செல்வகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை கண்முன் நிறுத்துகிறத்து. அதேபோல் சண்டைக்காட்சிகளுக்கான ஷாட்களும் ரசிக்க வைக்கின்றன. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் பாடல் மற்றும் பின்னணி இசை இரண்டும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.

Also read... இந்த வாரம் திரையரங்கில் வெளியான படங்கள் ஒரு லிஸ்ட்!

இந்தப் படத்தில் இடம்பெறும் அப்பா போன்ற கதாபாத்திரங்கள் இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் பல மகன்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் அப்பாக்களுடன் முரன்படுவது வழக்கம். முத்தையாவின் முந்தைய படங்கள் போல் விருமனும் ஒரு சமூகத்தின் பின்னணியில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் முதல் பாதியில் இடம் பெறும் ப்ளாஷ்பேக் காட்சிகள் சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வை கொடுக்கின்றன. கிராமத்து கதை, உறவுகளுக்கு முக்கியத்துவம் என சிலர் நினைக்க வாய்ப்பு உண்டு.

நடிகர் ராஜ்கிரண் நடிக்கும் படங்கள் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற கருத்து உண்டு. அதை விருமன் படமும் நிருபித்திருக்கிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actor Karthi, Entertainment, Movie review