Home /News /entertainment /

Jai Bhim review: எப்படி இருக்கிறது சூர்யாவின் ஜெய் பீம் படம்...?

Jai Bhim review: எப்படி இருக்கிறது சூர்யாவின் ஜெய் பீம் படம்...?

ஜெய் பீம்

ஜெய் பீம்

ராஜாகண்ணுவின் வழக்கை எடுத்து விசாரிக்கும் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். வழக்கமான அடிதடி கதாபாத்திரத்தை விடுத்து, நீதிக்காக கோர்ட்டில் வாதாடும் வேடம். தனது வாதங்களால் அரசுத் தரப்பை திணறடிக்கும் இடங்களில் ஹீரோயிசம் தானாகவே கூடி வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
இருளர் பழங்குடி மக்கள் மீது காவல்துறையும் சாதிய சமூகமும் காலங்காலமாக செலுத்திவரும் வன்முறையை 1995 இல் நடந்த உண்மைச் சம்பவத்தின் வழியாக சொல்கிறது ஜெய் பீம்.

இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுக்கு மனைவி, மகளை கல் வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்று விருப்பம். வெளியூர் சென்று செங்கல்சூளையில் வேலை செய்து அதற்காக பணம் திரட்டுகிறான். இந்த நேரம் அவன் பாம்பு பிடித்த வீட்டிலிருந்து நகை களவு போகிறது. பழி ராஜாகண்ணு மீது விழ, அவனது கர்ப்பிணியான மனைவி, நண்பர்கள், சகோதரி என அனைவரும் போலீசின் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள். ராஜாகண்ணுவையும் கைது செய்து அடித்து உதைக்கிறார்கள். போலீஸ் கஸ்டடியில் இருந்த ராஜாகண்ணுவும், அவனது நண்பர்கள் இருட்டப்பனும், மொசக்கட்டியும் லாக்கப்பிலிருந்து தப்பித்ததாக போலீஸ் கூறுகிறது. போலீஸ் சொல்வது உண்மையா, தப்பித்த தனது கணவன் எங்கே சென்றான் என்பது அறியாத அவனது மனைவி செங்கேணி நீதி தேடி செய்த நெடும்பயணத்தை ஜெய் பீம் சொல்கிறது.

மனைவி மீது ப்ரியமும், ஊரார் செய்யும் இழிவுகள் உணர்ந்தும், அவற்றைப் பொருட்படுத்தாமல் ஊருடன் இணைந்து செல்ல முயற்சிக்கும் ராஜாகண்ணு வேடத்தில் மணிகண்டன் நடித்துள்ளார். போலீஸ் கொட்டடியில் சித்திரவதைக்கு உள்ளாகும் போதும், ஒருமுறை திருடன்னு ஒத்துக்கிட்டா காலம்பூரா அந்தப் பழி போகாது என்று பிடிவாதமாக பொய் சொல்ல மறுக்கும் அந்த உறுதி நம்மை உலுக்குகிறது. கணவன் மீது காதல் கொண்டு குழையும் ஆரம்பக் காட்சியில் செயற்கையின் சாயல் எட்டிப் பார்த்தாலும், போகப் போக செங்கேணியாக நம் மனதில்; விஸ்வரூபமெடுத்து நிற்கிறார் லிஜோமோள் ஜோஸ். போலீசார் அடித்து இழுத்துச் செல்கையில் கணவனின் நிலைகண்டு கதறுமிடத்திலும், வழக்கை வாபஸ்பெற பணப்பேரம் பேசுகையில் அதை மறுக்குமிடத்திலும் நடிப்பு மிளிர்கிறது.

ராஜாகண்ணுவின் வழக்கை எடுத்து விசாரிக்கும் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். வழக்கமான அடிதடி கதாபாத்திரத்தை விடுத்து, நீதிக்காக கோர்ட்டில் வாதாடும் வேடம். தனது வாதங்களால் அரசுத் தரப்பை திணறடிக்கும் இடங்களில் ஹீரோயிசம் தானாகவே கூடி வருகிறது

இவர்கள் தவிர பழங்குடியினராக நடித்திருக்கும் அனைவரும், நடிப்பு என்பது தெரியாதவண்ணம் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். கொடூரமான எஸ்ஐ ஆக வரும் தமிழும்,பலவீனத்தை சிரித்து மழுப்பும் அரசு வழக்கறிஞராக குரு சோமசுந்தரமும், கம்பீரமான எதிர்தரப்பு வக்கீலாக பிரகதீஸ்வரனும், சிவநமஹ என்ற சொல்லில் தனது குணத்தை வெளிப்படுத்தும் எம்.எஸ்.பாஸ்கரும், நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜும் என அனைவரும் தத்தமது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

நடிகர்களுக்கான ஒப்பனைகளும், உடைகளும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவை. பழங்குடியினர் குடியிருப்பு, போலீஸ் கொட்டடி, நீதிமன்ற அறை என கலை இயக்குனரின் பங்களிப்பு அபிரிதமானது. கதையை மீறிச் செல்லாத ஒளிப்பதிவு. போலீசாரின் சித்திரவதைக் காட்சிகளை துல்லியமாக படம் பிடித்திருப்பதில் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவின் உழைப்பு தெரிகிறது. கதையின் ஓர்மை தவறாத எடிட்டிங். இவை அத்தனையையும் ஒன்றிணைத்து ஒரு நல்ல படத்தை தந்திருக்கும் இயக்குனர் .செ.ஞானவேல் பாராட்டுக்குரியவர்.

ஜெய் பீம் பலவகைகளில் முக்கியமான திரைப்படம். அதைச் சொல்லாமல் இந்த விமர்சனம் முழுமையாகாது.

1. ஜெய் பீமில் காட்டப்படுவது எதேச்சையாக நடந்த ஒரு சம்பவம் அல்ல. பழங்குடியின மக்களை காலங்காலமாக சாதிய சமூகமும், காவல்துறையும் இப்படித்தான் நடத்தி வந்திருக்கிறது. அதனை உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் பெரும்பான்மை மக்களுக்கு ஜெய் பீம் கொண்டு சேர்த்திருக்கிறது. இது பெரும் பணி

2. பழங்குடியினருக்கு ரேஷன் அட்டை, ஆதார் உள்பட அரசு சார்ந்த எந்த உரிமையும் இல்லை. ஓட்டுரிமை இல்லாததால்தான் ஊர் பிரசிடென்ட், செங்கேணி உதவி என்று போய் நிற்கையில், நீ ஓட்டுப்போட்டா நான் ஜெயிச்சேன் என்று தெனாவெட்டாக கேட்கிறார். ஏன் ஓட்டுரிமை கொடுக்கப்படவில்லை? அதற்கும் அவரே பதில் சொல்கிறார். இப்பவே கண்ட சாதிக்காரன் முன்னால குனிய வேண்டியிருக்கு. இதுங்களுக்கும் ஓட்டு குடுத்தா இதுங்க கால்லயும் விழணுமா? ஆதிக்க சாதிகளின் அடிமைகளாக வைத்திருக்கவே பழங்குடியினர் அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி முக்கியமானது.

3. 12 இயர்ஸ் ஆஃப் ஸ்லேவ் திரைப்படத்தில், பைபளில் ஆழ்ந்த விசுவாசம் கொண்ட வெள்ளையர்கள், உன்னைப் போல் பிறரையும் நேசி என்ற பைபளின் வரிகளை கறுப்பர்கள் விஷயத்தில் கடைப்பிடிப்பது இல்லை. அது பைபிளை மீறியச் செயல் என்று அவர்கள் உணர்வதேயில்லை. அவர்களைப் பொறுத்தவரை கறுப்பர்கள் சக மனிதர்கள் அல்ல. வெள்ளையர்களுக்கு சொந்தமான உடமைகள். அதனை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதே ஆண்டை மனோபாவமே, சிறையிலிருந்து விடுதலையாகி வரும் பழங்குடியினரை, சிறை வாசலிலேயே பொய் வழக்குப் போட்டு இழுத்துச் செல்ல வைக்கிறது. உன்னையெல்லாம் ஊருக்குள்ள விடக் கூடாது என்று ஊர்ப்பெரியவரை பேச வைக்கிறது. உதவி செய்ய ஒரே பைக்கில் பயணித்தாலும் பைக் ஓட்டுகிறவனை தொடக் கூடாது என எச்சரிக்கிறது. சேரியில கிடக்கிறவன் எப்படி என் ஊர்க்காரனாவ என்று எரிச்சல் கொள்கிறது. இந்த ஆதிக்க மனநிலை நுட்பமாகவும், தொடர்ச்சியாகவும் படத்தில் வந்து கொண்டேயிருக்கின்றன.

4. அண்ணனை அடிக்காதீங்க என்று காலைப் பிடித்து கதறும் போது, எஸ்.. அவனை இரண்டு மிதி மிதித்துவிட்டு, தொட்டுப் பேசறியா என்று சொல்லுமிடம் ஆண்டை மனநிலையின் உச்சம். ஒருவன் உயிர் பிச்சைக் கேட்டு காலை பிடிக்கும் போதுகூட, என்னை தொட வேற செய்யிறியா என்று அகங்காரம் கொள்ளுகிற அளவுக்கு சாதிய ஆணவம் சமூகத்தின் தலைக்கேறி நிற்கிறது. இந்தப் படத்தின் ஆகச்சிறந்த வசனம் இது.

Also read... ஜெய் பீம் படத்தால் விக்ரம் பிரபுவின் டாணாக்காரனுக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

5. உங்களுக்கு எத்தனை அநீதி இழைக்கப்பட்டாலும், ஊரும், அதிகாரமும் அதற்கு துணை நின்றாலும், நீதிக்காகப் போராட எல்லா இடங்களிலும் இரண்டு பேர் இருப்பார்கள். அவர்களின் போராட்டம் எந்த எல்லைக்குச் சென்றும் நீதியை பெற்றுத்தரும் என்ற நேர்மறை நம்பிக்கையை இந்தப் படம் தருகிறது. ஒண்ணுமே மாறாது சார், எப்பவுமே இப்பிடித்தான் சார் என்ற மொண்ணைக் குரல்களுக்கான வலுவான பதிலடி ஜெய் பீம்.

கலாபூர்வமாக அணுகி விமர்சிக்க படத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும், படம் பேசும் உண்மைகள் அந்த குறைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றன. ஜெய் பீம் தமிழ் சினிமாவின் பெருமிதம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya, Jai Bhim

அடுத்த செய்தி